csk 2025
csk 2025cricinfo

103 ரன்.. சொந்த மண்ணில் படுமோசமான சாதனை படைத்த சிஎஸ்கே! தோனி கேப்டன் ஆன பிறகும் மாறாத ஆட்டம்!

2024 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 103 ரன்களுக்கு சுருண்ட சிஎஸ்கே அணி படுமோசமான ஒரு டோட்டலை பதிவுசெய்துள்ளது.
Published on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பீல்டிங் தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்தப் போட்டியில் சென்னை நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், களத்தில் நடந்ததோ வேறு கதை.

படுமோசமான ஆட்டம்.. 103-க்கு சுருண்ட சிஎஸ்கே!

சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர். இருவரும் பவர் பிளேவில் மிகவும் மந்தமாக ஆடினர். இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். பவர் பிளேவின் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிறகு 31 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. அடுத்து யாராவது வந்து ஆட்டத்தை காப்பாற்றுவார்கள் என்று பார்த்தால் கடைசி வரை அது நடக்கவே இல்லை.

சில வாய்ப்புகள் வழக்கம் போல் கிடைத்த போதும் விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட நேரமாக டொக்கு வைத்துக் கொண்டிருந்த ராகுல் திரிபாதி 22 பந்துகளை சந்தித்து 16 ரன்னில் நடையைக்கட்டினார். அடுத்து வந்த அஸ்வினும் ஒரு ரன்னில் வந்த வேகத்தில் திரும்பினார்.

ஜடேஜாவும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அவருக்கு பிறகு தோனிக்கு பதிலாக தீபக் ஹூடா வந்தார். ஆனால், அவரும் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து தோனி களத்திற்கு வந்தார். ஆட்டத்தை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் சில ஷாட்களையாவது அடிப்பார் என்று பார்த்தால் அவரும் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். நூரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்தார் ஷிவம் துபே. அவர் 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியில் சுனில் நரைன் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ஷர்ஷித் ரானா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஒரு அணியில் பந்துவீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

சேப்பாக்கத்தில் குறைவான ஸ்கோர்!

இன்றைய போட்டியில் சிஎஸ்கே அடித்த 103 ரன்களே, சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவுசெய்த மிகக்குறைவான டோட்டலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் சென்னை அணி பதிவுசெய்த இரண்டாவது மிகைக்குறைவான டோட்டலாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

104 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தொடர்ந்து 5வது தோல்வியை தழுவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com