அடுத்த ஐபிஎல்லில் தோனி விளையாடுவாரா? - ரகசியம் பகிர்ந்த மொயின் அலி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்தாண்டும் ஐபிஎல்லில் விளையாட திட்டமிட்டுள்ளார் என அவரது சக வீரரான மொயின் அலி தெரிவித்துள்ளார்.
மொயின் அலி-தோனி
மொயின் அலி-தோனிட்விட்டர்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதையடுத்து 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த புதன்கிழமை (12.04.23) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியை, 2.2 கோடி பேர் ஜியோ சினிமா ஸ்ட்ரீமில் பார்த்ததே சாதனையாக இருந்த நிலையில், நேற்று ஆர்சிபி அணியுடன் சென்னை அணி மோதியப் போட்டியை 2.4 கோடி பேர் கண்டு களித்தனர்.

சென்னை-ஆர்சிபி
சென்னை-ஆர்சிபி

இந்நிலையில், கிரிக்கெட் வலைத்தளம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி அடுத்தாண்டும் ஐபிஎல்லில் விளையாட திட்டமிட்டுள்ளார் என அவரது சக வீரரான மொயின் அலி தெரிவித்துள்ளார். தோனிக்கு 41 வயதாகிவிட்டாலும் அவரது ஆட்டம் அபாரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனியின் பேட்டிங்கை பார்த்தால் அவர் இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் கூட ஆடலாம் என்பது போல் தோன்றுவதாகவும், மொயின் அலி கூறியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு எனக்கு வியப்பாக இல்லை எனவும், ஏனெனில் வலைப் பயிற்சியின்போதே நம்பமுடியாத அளவிற்கு பேட்டிங்கில் அபார திறமையுடன் விளங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

MS Dhoni
MS DhoniPTI

மேலும், தோனி மிகவும் பணிவானவர் என்றும், அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்றும் மொயின் அலி கூறியுள்ளார். தோனி இந்தாண்டுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் அவர் முழங்கால் காயத்தால் அவதிப்படுவதால் ரன் எடுக்க சிரமப்படுவதாகவும் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் மொயின் அலியின் இந்த பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com