சர்ச்சைக்குரிய வகையில் கொடுக்கப்பட்ட Run Out.. நடுவருடன் கத்தி சண்டையிட்ட கில்! Out? (or) Not Out?
2025 ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு அணிகளும் வெளியேறிவிட்டன. மீதமிருக்கும் 8 அணிகளுக்கு இடையே பிளே ஆஃப் செல்வதற்கான போட்டி வலுவானதாக இருந்துவருகிறது.
மீதமிருக்கும் அனைத்து போட்டிகளையும் வென்றால் சன்ரைசர்ஸ் அணிக்கு பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதால், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து களம்கண்டது கம்மின்ஸ் தலைமையிலான SRH அணி.
சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்ட கில்!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பந்துவீச்சை தேர்வுசெய்தோம் என வருத்தப்படுமளவு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய டைட்டன்ஸ் அணி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்து அசத்தியது.
மிஸ்டர் கன்ஸிஸ்டன்ஸியாக கலக்கிவரும் சாய் சுதர்சன் 9 பவுண்டரிகளை நாலாபுறமும் சிதறடித்து 23 பந்தில் 48 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய சுப்மன் கில் 37 பந்தில் 76 ரன்கள் அடித்து சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். 12 ரன்ரேட்டில் விளையாடிய குஜராத் அணி 230 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்ப்பார்த்த போது, யாரும் எதிர்ப்பார்க்காத சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் கொடுக்கப்பட்டார் சுப்மன் கில்.
13வது ஓவரின் கடைசி பந்தை ஜீஷன் அன்சாரி வீச, அதை லெக் சைடில் தட்டிவிட்ட பட்லர் சுப்மன் கில்லுக்கு 1 ரன்னுக்கான அழைப்பை விடுத்தார். ஆனால் பந்தை பிடித்து வேகமாக அடித்த ஃபீல்டர் ரன் அவுட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். அவுட்டா? நாட் அவுட்டா? என்ற குழப்பம் ஏற்பட முடிவ் 3வது நடுவருக்கு சென்றது.
ஆனால் DRS-க்கான ரீப்ளேவில் பந்து முதலில் ஸ்டம்பை தாக்காமல், விக்கெட் கீப்பரின் கிளவ்ஸை விட்டு பந்து நழுவி சென்ற பிறகு, கீப்பரின் கைகள் மட்டுமே ஸ்டம்பை தாக்கியதும், பெய்ல்ஸ் எகிறி ரெட் லைட் எறியும் போது பந்து கையை விட்டு முழுமையாக சென்றுவிட்டதும் தெளிவாக தெரிந்தது. ஆனால் முடிவை சரியாக கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார் 3வது நடுவர்.
எப்படியும் நாட் அவுட் தான் வரப்போகிறது என காத்திருந்த குஜராத் ரசிகர்களுக்கு அவுட் என்ற 3வது நடுவரின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத சுப்மன் கில் கத்தியபடி விரக்தியுடன் வெளியேறினார். 4வது நடுவருடன் கில் கத்தி சண்டையிடுவதையும் நம்மால் பார்க்க முடிந்தது.
மூன்றாவது நடுவரின் முடிவின் படி விக்கெட் கீப்பரின் கையில் பந்து இருந்தபோது, ஸ்டம்பை தாக்கிவிட்ட பின்னரே பந்து விலகிசெல்கிறது. பெய்ல்ஸ் எழும்போது ஸ்டம்புடன் பந்து தொடர்பில் இல்லையென்றாலும், பந்து ஏற்படுத்திவிட்டு சென்ற வேரியேசனில் தான் பெய்ல்ஸ் எகிறியது, அதனால் அது அவுட் என்ற முடிவை அறிவித்தார்.
இருப்பினும் 3வது நடுவரின் இந்த அறிவிப்பை விமர்சித்து வரும் நெட்டிசன்கள், சுப்மன் கில் நாட் அவுட் என பதிவிட்டு வருகின்றனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 20 ஓவரில் 224 ரன்களை அடித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.