இது புதுசா இருக்கே!! ஆக. 15-ல் தொடங்கும் சர்வதேச ரோபோ விளையாட்டுப் போட்டிகள்! எங்கே தெரியுமா?
சீனாவில் வரும் 15ஆம் தேதி தொடங்க உள்ள சர்வதேச ரோபோ விளையாட்டு போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகில் மனிதர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கிள்ள நிலையில் அடுத்து இயந்திர மனிதர்கள் எண்ணிக்கை பெருகத் தொடங்கியுள்ளது. வீடுகள், உணவகங்களில் இருந்து தொழிற்சாலைகள் வரை இயந்திர மனிதர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சீனா போன்ற பெருந்தொழில் நாடுகளில் முழுக்கமுழுக்க இயந்திர மனிதர்களே பணிபுரியும் ஆலைகள் பெருகி வருகின்றன.
இந்நிலையில் இயந்திர மனிதர்களுக்காக என்றே உலகளாவிய விளையாட்டு போட்டியை சீனா நடத்த உள்ளது. 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற அதே இரு மைதானங்களில் இப்போட்டிகள் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளன.
இயந்திர மனிதர்களுக்கென்றே உலகளவில் நடைபெறும் முதல் விளையாட்டு போட்டி இதுவாகும், இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் ரோபோக்களுக்கான ஓட்டப்பந்தயத்தை சீனா நடத்தியிருந்தது. தடகளம், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் என 11 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மனித அசைவை அப்படியே வெளிப்படுத்துவது, வேகம், ஒருங்கிணைப்பு, குழுவாக செயல்படுவது போன்ற விஷயங்களும் சோதிக்கப்படும். ரோபோக்கள் இனியும் விளையாட்டான பொருட்களல்ல என்பதை இந்த போட்டிகள் உலகிற்கு உணர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.