
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் சீசனின் 16வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றிருக்கும் இந்தத் தொடரில் எல்லா அணிகளும் உற்சாகமாய் விளையாடி வருகின்றன. அதிலும் கேப்டன் தோனியைக் கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு உற்சாகமாய் உள்ளது. முதல் போட்டியில் குஜராத்திடம் வீழ்ந்தாலும், அடுத்த இரு போட்டிகளிலும் (லக்னோ, மும்பை) வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலிலும் முன்னேறி வருகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை, சென்னை அணியிலிருந்து இரண்டு முக்கியமான வீரர்கள் விலகியுள்ளனர். அதில் முக்கியமானவர் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ். மற்றொருவர் இந்திய வீரரான தீபக் சாஹர். இதில் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியால் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். முதல் இரண்டு (7 மற்றும் 8 ரன்கள்) போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்காத போதும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. போட்டிக்கு முன்பு பயிற்சியின்போது கால் விரலில் ஏற்பட்ட காயத்தால் நேற்றையப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
அதுபோல், 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட தீபக் சாஹரும் காயத்தால் விலகியுள்ளார். இவரும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், நேற்றைய போட்டியில் அவரது முதல் ஓவரை வீசியபோது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். தற்போது இந்த இரண்டு முக்கியமான வீரர்களும் விலகியிருப்பது, சென்னை அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், அவர்களின் காயம் குறித்து மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்து வருகின்றனர். இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அணி தெரிவித்துள்ளது. தீபக் சாஹர், கடந்த காலத்திலும் காயத்தால் அவதிப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் அடுத்த போட்டிகளில் விளையாடுவார்களா அல்லது இன்னும் எத்தனை நாள் ஓய்வு தேவை என்பது குறித்து அவர்கள் சென்னை திரும்பிய பிறகே, முக்கியமாக தீபக் சாஹருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபிறகு சொல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.