பதிரானா பற்றிய தோனியின் கருத்தை எதிர்த்த மலிங்கா: வரவேற்ற சமிந்தா- கிரிக்கெட் வல்லுநர் கூறுவது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து விட்டு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் பதிரானா கவனம் செலுத்த வேண்டும் என தோனி கூறியதற்கு, லசித் மலிங்கா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தோனியின் கருத்தை சமிந்தா வாஸ் ஆமோதித்துள்ளார்.
சமிந்தா-பதிரானா-தோனி-மலிங்கா
சமிந்தா-பதிரானா-தோனி-மலிங்காFile image

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடும் போட்டிகளின் டெத் ஓவர்களில், பிராவோ இல்லாத குறையை இலங்கை அணியின் இளம் வீரரான மதீஷா பதிரானா தீர்த்து வைத்து வருவதாகவே கிரிக்கெட் வல்லுநர்களாலும், ரசிகர்களாலும் பேசப்பட்டு வருகிறது. தோனியும், 20 வயதே ஆன ‘குட்டி மலிங்கா’ என அழைக்கப்படும் இளம் வேகப்பந்து வீச்சாளர் பதிரானாவை ஒவ்வொரு போட்டிகளின்போதும் பாராட்ட தவறுவதில்லை.

 Matheesha Pathirana
Matheesha PathiranaPTI

அந்தவகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அண்மையில் மும்பைக்கு எதிரானப் போட்டியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணி வெற்றிபெற்றப் பின்பு அளித்தப் பேட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் சொத்தாக பதிரானா இருப்பார் எனவும், ரெட் பால்களை விட ஒயிட் பந்துகளில், அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் நல்ல உடற்தகுதியுடன் ஐசிசி போட்டிகளில் விளையாடுவதை அவர் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும், ஒருநாள், டி20 போட்டிகளில் கூட குறைவான அளவே பங்கேற்க வேண்டும் எனவும் தோனி, பதிரானாவை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான லசித் மலிங்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

RR
RRShahbaz Khan, PTI

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுபற்றி கேட்டபோது அவர் அளித்த பதிலில், “ஐசிசி போட்டிகளில் மட்டுமே பதிரானாவை விளையாட வைக்க வேண்டும் என்று வேடிக்கையாக தோனி அப்படி சொல்கிறார் என்றே நினைக்கிறேன். தேசிய அணிக்காக விளையாடும்போது அதைச் செய்வது கடினம். ரெட் பால் கிரிக்கெட்டில் அவரை விளையாட வைக்கக் கூடாது என்று சொல்பவர்கள், அவர் காயம் அடைந்து விடுவார் என்ற பயம் காரணமாகவே அப்படி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் முதலில் ரெட் பால் கிரிக்கெட்தான் விளையாடினேன். அப்போது என்னிடம் யாரும் அப்படி எதுவும் சொல்லவில்லை. கடந்த 2004 முதல் 2010 வரை ரெட் பால் கிரிக்கெட்தான், விளையாடினேன். எனினும், சர்வதேச அரங்கில் 16 வருடங்கள் என்னால் பந்துவீச முடிந்தது. மேலும் நான் நிறைய ஐபிஎல் மற்றும் பிக் பாஷ் உள்பட மற்ற அனைத்து லீக்குகளிலும் விளையாடினேன். காயம் என காரணம் காட்டி களத்தை விட்டு பாதியிலேயே வெளியேறியதில்லை. எனது கருத்தை சிலர் எதிர்பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.

பந்துவீச்சின்போது எலும்பு தொடர்பான காயங்கள் வரலாம். ஆனால் அது ஒவ்வொரு பந்திலும் நீங்கள் எடுக்கும் முயற்சியைப் பொறுத்தது. எனினும் நான் பதிரானாவிடம் சொல்வது என்னவெனில் ‘எப்படியாவது உனது டெஸ்ட் தொப்பியைப் பெற்றுவிடு’ என்பதுதான். அவர், ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் கூட ஆடலாம். இல்லை, 10 அல்லது 100 கூட விளையாடலாம். அதுபற்றி யாராலும் கணிக்க முடியாது. 15-20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போதுதான், அவர் தனது பந்துவீச்சு தகுதி மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வார். என்னைவிட சிறந்த வீரராக அவரை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

சமிந்தா-பதிரானா-தோனி-மலிங்கா
‘தோனியுடன் மீண்டும் மோதலா?’ - ஜடேஜாவின் ‘கர்மா’ ட்வீட்டும், அவரது மனைவியின் பதிலும்!

இந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ், தோனியின் கருத்துதான் சரியானது என்றும், மலிங்காவின் கருத்து தவறானது என்றும் கூறியுள்ளார். அதில், “ஒரு வருடத்திற்கு முன்பு இலங்கை கிரிக்கெட் அணியில் நான் பணிபுரிந்தபோது, அவர்களிடம் இதையே தான் நான் குறிப்பிட்டேன். மதி (மதீஷா பதிரானா) போன்றவரை பாதுகாப்பது அவசியம். அவர் எல்லா விதமான வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியிருந்தால், அவரால் தொடர்ந்து பந்துவீச முடியாது, ஏனெனில் பதிரானாவின் பந்து வீசும் விதம் அப்படி. அவரது பந்துவீச்சு எளிதான செயலாக இல்லை, மிகவும் கடினமான ஒரு தனித்துவமான செயல். அதனால் உடற்தகுதி மிகவும் முக்கியம். நான்கு ஓவர்கள் வீசுவது வரை எல்லாம் சரியாக இருக்கும். அதற்கு மேல் பந்து வீசினால், அப்போது தான் காயம் சம்பந்தமான பிரச்சனைகள் வரும், தோனி கூறியதுப்போன்று. அதனால் பதிரானா பற்றி தோனி கூறியதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் வி.வி.கிரியிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, “தோனி மற்றும் சமிந்தா வாஸ் சொல்வதுதான் சரி. இந்த மாதிரி ஆக்ஷனில் பௌலிங் போடுவதற்கு லசித் மலிங்கா தான் முன்னோடி. ஆனால், பதிரானா, மலிங்காவைவிட கொஞ்சம் வித்தியாசப்படுகிறார். ஆக்ஷன், பௌலிங் எல்லாம் அதேதான். எனினும், 20 வயது இளம் வீரர் என்பதால், அதிவேகத்தில் பந்து வீசுகிறார். 150 (kmph) கிலோ மீட்டர் வேகத்தில் அநாசியமாக பந்து வீசுகிறார் பதிரானா. அந்த மாதிரி பௌலிங் செய்யும்போது காயம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைத்தான் தோனி சொல்கிறார். காயம் ஏற்படாமல் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதைதான் நானும் வலியுறுத்துகிறேன். காயம் ஏற்பட்டால், பின்னர் மலிங்கா மாதிரி 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு பதிரானா சென்றுவிடுவார். 120 கிலோ மீட்டர் வேகத்தில் இவரது பௌலிங்கில் ஆடுவது மிகவும் எளிது. அதனால், அளவான போட்டிகளில் அவரை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி, 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடாது. சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். 6 பந்துகளிலும 150-ல் வீசாமல், 130, 140 என்று வீச வேண்டும். சமிந்தா வாஸ் உடற்தகுதி குறித்து நன்கு அறிந்தவர். அதனால், அவர் சொல்வது மிகவும் சரி” என்று தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பியுள்ள நிலையில், சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் பிளே ஆஃப் போட்டியில் குஜராத் அணியை, சென்னை அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். தோல்வியுறும் அணி, நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் (மும்பை vs லக்னோ) வெற்றிபெறும் அணியுடன் வரும் வெள்ளிக்கிழமை மோதும். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com