11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரம் | ”A1 - RCB அணி நிர்வாகம்”.. பாய்ந்தது வழக்குப் பதிவு!
17 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றெடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில் வெற்றிபெற்ற பெங்களூரு அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர்.
அப்போது, பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..
17 வருட தோல்விகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி 11 ரசிகர்களின் உயிரிழப்பால் மகிழ்ச்சியின்றி போய்விட்ட நிலையில், உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் மொத்தமாக தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கர்நாடகா அரசு சார்பில் ரூ.10 லட்சம், ஆர்சிபி மேனேஜ்மென்ட் சார்பில் ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபி மீது வழக்குப்பதிவு..
கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்திருக்கும் கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு கர்நாடகா அரசே காரணம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இதற்கிடையில் பெங்களூரில் கூட்ட நெரிசல் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பிரிவுகளில் ஆர்சிபி மேனேஜ்மென்ட் A1 என்றும் டிஎன்ஏ ஈவென்ட் மேனேஜ் A2 என இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.