இதுதான் நட்பு | தோனி சம்மதித்த பிறகுதான் அதை செய்தேன்.. உண்மையை வெளிப்படுத்திய பிராவோ!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராகவும், 500 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளராகவும் விளங்கியவர் டிவெய்ன் பிராவோ.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு தூணாக விளங்கிய பிராவோ, எம்எஸ் தோனியின் துருப்புச்சீட்டாக விளங்கினார். ஒருவீரராக சிஎஸ்கேவிற்கு 3 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த பிராவோ, 2023 ஐபிஎல் சீசனில் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் மாறி சென்னை அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார்.
இந்த சூழலில் 2024 சிஎஸ்கே அணியின் பவுலிங் கோச்சாக இருந்த பிராவோ, 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் மெண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். எதற்காக சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறினார் என்ற காரணத்தை தற்போது பகிர்ந்துள்ளார் பிராவோ.
தோனி சம்மதம் சொன்ன பிறகுதான் அதை செய்தேன்..
2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சமீபத்திய உரையாடலில் பேசியிருக்கும் பிராவோ, சென்னை அணியிலிருந்து வெளியேறியது பற்றி பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், “KKR அணியில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் முதலில் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்ன பிறகுதான், அதை ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதை” என்று கூறினார்.
மேலும் இறுதிப்போட்டியில் கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணியில் விளையாடினால் என்ன மனநிலை இருக்கும் என்று பேசிய அவர், “கொல்கத்தா vs சிஎஸ்கே, ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினால், நான் கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்று தான் நிச்சயமாக விரும்புவேன். இது சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், ஆனால் ஆலோசகராக இருக்கும் இடம் அதுதான். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தைத் தொடர என்னை அவர்கள் அணியில் இணைத்துள்ளனர், நான் அவர்கள் வெல்லவே விரும்புவேன். தோனியும் அதை புரிந்துகொள்வார்” என்று பேசியுள்ளார்.