1426 நாட்கள்.. தோனியின் கம்பேக் பார்ட்டியை கெடுத்த சிஎஸ்கே பவுலர்கள்.. கடுப்பாகி விமர்சித்த பட்லர்!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் மந்தமான பந்துவீச்சு பலரது பொறுமையையும் சோதனைக்குள்ளாக்கியுள்ளது. அந்தவகையில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லர் சிஎஸ்கேவை விமர்சித்துள்ளார்.
Csk- Dhoni
Csk- DhoniPTI

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2023 ஐபிஎல் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததை அடுத்து 4 வருடங்களுக்கு பிறகு சொந்த மைதானத்தில் சிஎஸ்கே பங்குபெற்று விளையாடியது. 4 வருடங்களுக்கு பிறகு முழு அரங்கமும் நிரம்பி இருந்த போட்டியில், சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் போர்டில் 200+ ரன்கள் குவித்தனர். ஆனால் இரண்டாம் பாதியில் பந்துவீசிய சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள், மோசமான ஒரு பந்துவீச்சு முகத்தை வெளிப்படுத்தினர். அது போட்டியை வழிநடத்திய கேப்டன் தோனிக்கு மட்டுமல்லாமல், பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களையும் கடுப்பேற்றியது.

1426 நாட்கள், 4 வருடத்திற்கு சொந்த மைதானத்தில் விளையாடிய சிஎஸ்கே!

4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாம்பியன் அணியான சிஎஸ்கே தங்களுடைய சொந்த ஆடுகளமான சேப்பாக்கத்தில் குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளது. கிட்டத்தட்ட 15 சீசன்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 5-6 சீசன்களில் மட்டுமே இங்கு விளையாடியுள்ளது.

Csk
CskPTI

சிஎஸ்கே அணி 2019 ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி தான் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக சேப்பாக்கத்தில் விளையாடி இருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 1426 நாட்கள் இங்கு விளையாடாத நிலையில், 4 வருடங்கள் கழித்து முழு அரங்கமும் நிரம்பிய நிலையில் நேற்று பங்குபெற்று விளையாடியது சிஎஸ்கே அணி. சேப்பாக்கத்தில் தனது 57 ஹோம் போட்டியை விளையாடிய சென்னை அணி, லக்னோ அணியை நேற்று வீழ்த்தியதை அடுத்து சொந்த மைதானத்தில் 41 போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

மீண்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது பெரிய அர்த்தத்தை சேர்த்துள்ளது! - எம் எஸ் தோனி

4 வருடம் கழித்து சேப்பாக்கத்தில் விளையாடுவது எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது என்பதை போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தோனி வெளிப்படுத்தியிருந்தார். டாஸ் போடப்பட்ட பிறகு பேசிய தோனி, “ 2008-ல் ஐபிஎல் தொடங்கியது, ஆனால் நாங்கள் இங்கு அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. சுமார் 5-6 சீசன்கள் மட்டுமே நாங்கள் இங்கு வந்து விளையாடியுள்ளோம்.

Dhoni
DhoniPTI

முழு மைதானமும் செயல்படுவது இதுவே முதல் முறை. சில ஸ்டாண்டுகள் முன்பு காலியாக இருந்தன. ஹோம் போட்டிகள் அனைத்தையும் சேப்பாக்கத்தில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு நிறைய அர்த்ததை சேர்த்துள்ளது” என்று மகிழ்ச்சியோடு பேசினார்.

தோனியின் ஹோம் கமிங் பார்ட்டியை கெடுத்த சிஎஸ்கே பவுலர்கள்!

4 வருடத்திற்கு பிறகு சொந்த மைதானத்தில் விளையாடும் போட்டிக்காக மகிழ்ச்சியாக காத்திருந்த தோனிக்கு பேட்ஸ்மேன்கள் தங்களது அபாரமான ஆட்டத்தால் கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தாலும், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் மகிழ்ச்சியை கெடுத்துவிட்டனர் என்றால் இல்லை என்று மறுக்க முடியாது.

Dhoni
DhoniPTI

போட்டியில் மிகவும் மந்தமாக பந்துவீசிய சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள், கூடுதலாக 13 ஒய்டு பந்துகள் மற்றும் 3 நோ-பால்களை வீசி மேலும் போட்டியின் நேரத்தை நீட்டித்தனர். வீரர்கள் அதிகாமன ஒயிட் பந்துகளை வீசுவதை பார்த்த கேப்டன் தோனி, பந்துவீச்சாளர்களை பார்த்து டைம் அதிகமாகி கொண்டே போகிறது என தன் கைகளை காமித்துகொண்டே இருந்தார்.

CSK - LSG
CSK - LSGPTI

பின் போட்டிக்கு பின்னர் பேசியிருந்த தோனி, “பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஒயிட் பந்துகள் மற்றும் நோ-பால்களை வீசுகின்றனர். அதை சரிசெய்ய அவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய போட்டியில் எனக்கு இரண்டாவது எச்சரிக்கை விடப்படும். மீண்டும் ஒரு எச்சரிக்கை விடப்பட்டால் பிறகு அவர்கள், வேறு கேப்டனின் தலைமையில் தான் விளையாட வேண்டியிருக்கும்” என சிரித்துக்கொண்டே சொன்னார். 3 முறை ஸ்லோ ஓவர் ரேட் ஒரு அணிக்கு கொடுக்கப்பட்டால், அணியின் கேப்டன் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியை விமர்சித்த பட்லர் மற்றும் ரசிகர்கள்!

ஸ்லோ ஓவர் ரேட்டில் வீசிய சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் போட்டியானது முடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இந்நிலையில் போட்டி முடிவதற்கு சில ஓவர்கள் மீதம் இருக்கும் போதே டிவிட்டரில் பதிவிட்டு சிஎஸ்கே போட்டியை விமர்சித்திருந்தார் ஜோஸ் பட்லர். அவர் பதிவிட்டிருந்த அந்த பதிவில், “ போட்டியின் வேகத்தை அதிகரிக்கலாம் ” என கை-கும்பிடும் ஸ்டிக்கரை பதிவிட்டு மந்தமாக வீசப்படுவதை விமர்சித்திருந்தார்.

ஸ்லோ ஓவர் ரேட் விவகாரத்தை விமர்சித்த ரசிகர்கள், “ எந்த ஒரு டி20 போட்டியையும் 3.5 மணி நேரத்திற்கு மேல் விளையாடுவது பாவம்” என்றும்,

“ ஒரு ஐபிஎல் டி20 போட்டியானது 4.30 முதல் 5 மணி நேரம் வரை விளையாடுவது பரிதாபத்திற்குரியது. இது ஒன்றும் டெஸ்ட் போட்டியில்லை “ என்றும் விமர்சித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com