
கடந்த ஒரு வருடமாக உலக கிரிக்கெட்டையே திருப்பி பார்க்க வைத்தவர் தான், இங்கிலாந்தின் இளம் பேட்டரான ஹாரி ப்ரூக். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அனைத்து இன்னிங்ஸிலும் ரன்களை மலைபோல் குவித்த அவர், 4 சதங்கள், 3 அரைசதங்கள் என விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அற்புதத்தையே நிகழ்த்தியிருந்தார். வெறும் 9 இன்னிங்ஸ்களில் 807 ரன்களை குவித்த அவர், அதிவேக டெஸ்ட் ரன்களை விரைவாக எட்டிய வினோத் காம்பிலியின் சாதனையை முறியடித்து அசத்தினார்.
9 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவருடைய சராசரியானது 100ஆக இருந்தது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து டி20, ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் அரைசதத்தை பதிவு செய்த ப்ரூக், எந்த ஃபார்மேட்டிலும் தன்னால் ரன்களை அடிக்க முடியும் என நிரூபித்து காட்டினார். அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் சென்ற ப்ரூக், 49 பந்துகளில் 102 ரன்கள் அடித்து அதிலும் அசத்தினார்.
இந்நிலையில், ஐபிஎல் ஏலத்திற்கு வந்த ஹாரி ப்ரூக், எப்படியும் அதிகவிலைக்கு தான் போகப்போகிறார், ஆனால் எந்த அணி அவரை கைவசப்படுத்தும் என்ற கேள்வி மட்டும் தான், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இருந்தது. ஏலத்தில் அவரை முதலில் எடுக்க மல்லுகட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தான். கிட்டத்தட்ட 5 கோடி வரை போராடிய பெங்களூரு அணி விலக, அவருக்கான ரேஸ்ஸில் இணைந்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி. ராஜஸ்தானுக்கும், சன்ரைசர்ஸ் அணிக்குமான போட்டி 13 கோடிகளை கடந்து பலமாக சென்றது. ஆனால் இறுதியாக ஹாரி ப்ரூக்கை 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்து தன்வசப்படுத்தியது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.
இந்த வருட ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில், லீடிங் ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிச்சயம் ஹாரி ப்ரூக்கும் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் 3, 13 என அவுட்டான அவர், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிரமப்பட்டார். மிடில் ஆர்டரில் தடுமாறிய அவரை ஓபனிங் வீரராக களமிறக்கியது ஹைத்ராபாத் அணி. 3ஆவது போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ப்ரூக், 3 பவுண்டரிகளை விரட்டி நன்றாக தொடங்கினாலும், அர்ஸ்தீப் பந்தில் போல்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தார்.
ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இன்றைய போட்டியிலாவது தன்னுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்ப்பார்ப்பு சன்ரைசர்ஸ் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அனைவரது எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்த அவர், யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றையும் இன்றைய போட்டியில் நிகழ்த்தி காட்டினார்.
லாகி பர்குசன் ஓவரில் 6, 4, 4, 4, 4 என விரட்டிய ப்ரூக், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அதிரடி காட்டினாலும், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மிஸ்டரி ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி விளையாட போகிறார் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. அந்த எண்ணத்தை எல்லாம் தவிடு பொடியாக்கிய ப்ரூக், ஸ்பின்னர்களுக்கு எதிராக நிறைவான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இறுதிவரை களத்தில் நின்ற ஹாரி ப்ரூக், தன்னுடைய அரைசதத்தை வெற்றிகரமாக சதமாக மாற்றி ஹைத்ராபாத் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.
விழுந்தால் விதையாக தான் விழுவேன் என விழுந்த ஹாரி ப்ரூக், எழும்போது அசைக்க முடியாத ஆலமரமாக எழுந்து, இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அதுமட்டுமல்லாமல் ஹாரி ப்ரூக்கின் அதிரடியான சதத்தால், இந்த வருட ஐபிஎல்லின் அதிகபட்ச டோட்டலை பதிவு செய்தது ஹைத்ராபாத் அணி. இதற்கு முன் லக்னோ அணிக்கு எதிராக சென்னை அடித்த 217 ரன்னே அதிகபட்ச ரன்னாக இருந்தது.