IND Vs BAN | தொடரை ஒரு வருடத்திற்கு நிறுத்திவைத்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) ஆகியவை வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான வெள்ளை பந்து தொடரை செப்டம்பர் 2026 வரை ஒத்திவைக்க பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளன. ஆகஸ்ட் 17 முதல் இந்தியாவும் வங்கதேசமும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், அதே அளவு டி20 போட்டிகளிலும் மோதவிருந்தன. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்ல இருந்த இந்திய அணி, அடுத்தாண்டு செப்டம்பரில் அங்கு செல்கிறது. இதனை, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவும் வங்கதேசமும் தற்போது வர்த்தகம் தொடர்பான பதற்றங்களை எதிர்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் வங்கதேசமும் கடைசியாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின்போது மோதின. அந்தப் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் கடைசியாக 2024ஆம் ஆண்டு இந்தியாவில் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் விளையாடியது. இந்தியா இரண்டு தொடர்களையும் முறையே 2-0 மற்றும் 3-0 என வென்றது.