WPL | பிசிசிஐ-யால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த சோதனை!

ஒரு மிகப் பெரிய தொடர் தொடங்குவதற்கு வெறும் ஒரு மாதம் முன்பு தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அட்டவணை அறிவித்திருக்கிறது. இப்படி அவர்கள் தாமதப்படுத்துவது இது ஒன்று முதல் முறை அல்ல
womens Premier League
womens Premier LeagueBCCI

வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடர் அட்டவணை வெளியிடுவதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தாமதம் ஏற்படுத்த, அது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு சோதனையாக மாறியுள்ளது. ஒருசில இங்கிலாந்து வீராங்கனைகள் இந்த WPL சீசனில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடந்த வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் வரும் பிப்ரவரி 23 முதல் மார்ச் 17 வரை நடக்கிறது. முதல் சுற்று பெங்களூருவிலும், இரண்டாவது சுற்று டெல்லியிலும் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த ஆண்டின் ரன்னர் அப் டெல்லி கேபிடல்ஸ் அணியோடு மோதுகிறது. இந்த தொடருக்கான அட்டவணை கடந்த ஜனவரி 23ம் தேதி தான் அறிவிக்கப்பட்டது. இது தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 5 சர்வதேச டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் விளையாடுகிறது. இந்தத் தொடர் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது. வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரின் ஃபைனல் 17ம் தேதியே முடியவிருக்கும் சூழ்நிலையில், அடுத்த இரு தினங்களில் இங்கிலாந்து வீராங்கனைகளால் தங்கள் தேசிய அணியோடு இணைந்து விளையாடுவது சாத்தியம் இல்லாத ஒன்று. அதனால் WPL தொடரில் விளையாடும் வீராங்கனைகள் முதல் 3 டி20 போட்டிகளில் விளையாட முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் 3 டி20 போட்டிகளுக்கான அணியில் நேட் ஷிவர்-பிரன்ட், அலீஸ் கேப்ஸி, சோஃபி எகில்ஸ்டன், டேனி வயாட் ஆகியோர் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கு மட்டுமான அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலாக முதல் 3 போட்டிகளுக்கான அணியில் ஹோலி ஆர்மிடாஜ், லின்ஸி ஸ்மித் ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள்.

இந்த சிக்கலின் காரணமாகத்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் இந்த சீசனில் பங்குபெறாமல் விலகினார். அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் நதீன் டி கிளர்க்கை ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதேபோல் உபி வாரியர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லாரன் பெல் இந்த சீசனிலிருந்து விலக, அந்த அணி இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்துவை மாற்றாக ஒப்பந்தம் செய்தது.

வீராங்கனைகள் மட்டுமல்ல, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஜான் லூயிஸுமே இந்த சிக்கலில் மாட்டியிருக்கிறார். உபி வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர், அந்த அணியின் கடைசி லீக் போட்டி (மார்ச் 11) முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்றூ கூறப்பட்டிருக்கிறது. அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார் துணைப் பயிற்சியாளர் ஆஷ்லி நாஃப்கி அந்த அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரச்சனையை தவிர்க்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல வகைகளில் முயற்சி செய்திருக்கிறது. தொடரை கொஞ்சம் தள்ளிவைக்குமாறு நியூசிலாந்து கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது. ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு அதை மறுத்துவிட்டது.

இதுபற்றிப் பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர் லூயிஸ், "இந்தத் தொடர் எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிசிசிஐ வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரின் அட்டவணையை தாமதமாக அறிவித்ததே இந்தக் குழப்பத்துக்கான காரணம். முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால், இதைத் தவிர்த்திருக்க முடியும்" என்று கூறியிருக்கிறார் அவர்.

அது உண்மை தான். ஒரு மிகப் பெரிய தொடர் தொடங்குவதற்கு வெறும் ஒரு மாதம் முன்பு தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அட்டவணை அறிவித்திருக்கிறது. இப்படி அவர்கள் தாமதப்படுத்துவது இது ஒன்று முதல் முறை அல்ல. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணை தாமதப்படுத்தி, அதை மறுபடியும் மாற்றி அவர்கள் செய்து குளறுபடிகளை உலக கிரிக்கெட் ரசிகர்கள் கரித்துக் கொட்டினார்கள். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் செய்துகொண்டிருக்கிறது பிசிசிஐ! இம்முறை அது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டையும் பாதித்துள்ளது.

வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீராங்கனைகள்
மும்பை இந்தியன்ஸ்: நேட் ஷிவர்-பிரன்ட், இஸி வாங்
டெல்லி கேபிடல்ஸ்: அலீஸ் கேப்ஸி
உபி வாரியர்ஸ்: சோஃபி எகில்ஸ்டன், டேனி வயாட்
ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர்: கேட் கிராஸ்


கேட் கிராஸ் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமே விளையாடப்போகிறார் என்பதால், அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேபோல் இஸி வாங் டி20, ஒருநாள் இரு அணிகளிலுமே இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com