ஐபிஎல் 2028 | அதிகரிக்கப் போகும் போட்டிகள்.. அணிகள் எத்தனை? பிசிசிஐ போடும் புது ப்ளான்!
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான, ஐபிஎல் தொடர் தற்போது 18ஆவது ஆண்டாகக் களைகட்டி வருகிறது. தினந்தோறும் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவரும் இந்தத் தொடர் அடுத்தகட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், 2028ஆம் ஆண்டு புதிய அணிகள் மற்றும் 94 போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய ஐபிஎல் தொடரில் 10 அணிகள் உள்ளன. இவ்வணிகள் சில அணிகளுடன் இரண்டு முறையும், சில அணிகளுடன் ஒரு முறையும் மோதும், இதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். இந்த நிலையில், 2028ஆம் ஆண்டு 94 போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக ஐபிஎல் தலைவர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) 2022இல் களத்தில் இறங்கியதிலிருந்து, ஐபிஎல் தற்போது 74 போட்டிகள் கொண்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. எனினும், 2028ஆம் ஆண்டு வரவிருக்கும் அடுத்த ஊடக உரிமைச் சுழற்சியில் இருந்து, லீக்கை 94 போட்டிகள் கொண்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வடிவத்திற்கு விரிவுபடுத்துவது தொடர்பாக பிசிசிஐ தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது, ஒரு நல்வாய்ப்பாக இருக்கும். ஐசிசியும் இதுகுறித்து பரிசீலித்து வருகிறது. இருதரப்பு மற்றும் ஐசிசி நிகழ்வுகள் தொடர்பாகவும், ரசிகர்களின் ஆர்வம் எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் கருத்தில் கொண்டும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்ததை நாங்கள் விரும்புகிறோம்.
அதன்படி, தற்போதைய 74 போட்டிகளிலிருந்து 84 அல்லது 94 ஆகச் செல்லலாம். இதனால் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடனும் உள்ளூர் மற்றும் வெளியூரில் விளையாட முடியும். நடப்பு சீசனில்கூட, ஐபிஎல் போட்டிகளை 84 போட்டிகளாக உயர்த்துவது குறித்து பேச்சு இருந்தது. ஆனால் இறுக்கமான திட்டமிடல் காரணமாக அது தாமதமானது. இதற்கான நேரம் வரும்போது அந்த முடிவை எடுப்போம். புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகப்படுத்தும் திட்டம், தற்போதைக்கு எதுவும் இல்லை. 10 அணிகள் என்பதே இப்போதைக்கு சிறப்பாக உள்ளது. எனினும், அப்போதைக்கு அதுகுறித்த முடிவு எடுக்கப்படும். நடப்பு சீசனில் கோப்பையை வெல்லாத ஓர் அணி கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.