”தோனி ஒரு மேஜிக் மேன்; ஒன்றுமில்லை என்பதையும் ஒரு பொக்கிஷமாக மாற்றுவார்” - மேத்யூ ஹைடன் புகழாரம்!

”தோனி ஒரு மேஜிக் மேன்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
dhoni, hayden
dhoni, haydentwitter page

ஐபிஎல் நடப்பு சீசன், கோப்பையை வெல்லும் இறுதிப்போட்டி ஒன்றுக்காக மட்டுமே காத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு 10வது முறையாகத் தகுதி பெற்று சாதனை படைத்திருக்கும் சென்னை அணியும், 2வது முறையாக தகுதி பெற்றிருக்கும் குஜராத் அணியும் நாளை பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதில், சென்னை 5வது முறையாகவும், குஜராத் 2வது முறையாகவும் வெல்லும் முனைப்பில் உள்ளன. இந்த நிலையில், தோனிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியிருப்பதை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தோனி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து திறமையான வீரர்களை உருவாக்கி வருகிறார். முக்கியமாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, சென்னை அணியில் தோனியால் சிறப்பாக பட்டை தீட்டப்பட்டு வருகிறார். அவரை, ரஹானே, ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் தோனியால் வார்த்தெடுக்கப் படுகின்றனர் எனப் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இதை மையமாக வைத்தே ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனும் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (UTS) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ஹைடன், ”தோனி ஒரு மேஜிக் மேன். வேண்டாம் என்று குப்பையில் எறியப்படும் பொருட்களையும் எடுத்து பொக்கிஷமாக மாற்றக் கூடியவர். எப்போதும் தோனி, நேர்மறையான எண்ணம் கொண்ட ஒரு கேப்டன். அவர், அணி வீரர்களைச் சரியான முறையில் கையாளும் திறன் கொண்டவர். இந்திய அணியை ஒரு கேப்டனாய் தோனி எப்படி வழிநடத்தினாரோ, அதேபோல் சென்னை அணியையும் வழிநடத்துகிறார். சென்னை அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதற்கு தோனியின் தலைமையும் முக்கியப் பங்கு வகித்தது. இந்த சீசனின் தொடக்கத்தில், சென்னை அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்தது.

என்றாலும் புள்ளி தரவரிசையில் முன்னேறியபோது, ​​அணியின் பந்துவீச்சை அற்புதமாக மாற்றினார். பேட்டிங் வரிசையில் அஜிங்க்யா ரஹானே மற்றும் சிவம் துபே ஆகியோரின் சிறப்பான ஆட்டமும் தோனியின் பங்களிப்புக்கு உதாரணம். இருவரின் ஃபார்ம் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. அடுத்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவாரா என்பது பெரிய விஷயமே இல்லை. தனிப்பட்ட முறையில் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளால், வீரர்களின் காலம் விரைவிலேயே முடிவடைகிறது. உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருவதால், மூன்று வடிவங்களிலும் விளையாடுவது வீரர்களுக்கு கடினமாகி வருகிறது. இது விளையாட்டின் எதிர்காலத்தை, குறிப்பாக 50-ஓவர் போட்டியைக் கேள்விக்குள்ளாக்குகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com