‘தோனி என்ட்ரிபோது பின்னணியில் நம்ம குரல்’- நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்; ஜட்டுக்கு என்னப் பாடல்?

தோனி வருகையின்போது, ‘கபாலி’ படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடல் அரங்கத்தில் ஒலித்ததை சுட்டிக்காட்டி, அப் பாடலை எழுதியவரும், பாடியவருமான அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
ஜடேஜா-தோனி-அருண்ராஜா காமராஜ்
ஜடேஜா-தோனி-அருண்ராஜா காமராஜ்File image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிஃபயர் போட்டி, சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில், குவாலிஃபயர் போட்டியில் முதல் இன்னிங்சில் சென்னை அணி பேட்டிங் செய்தது. அப்போது, 17.6 ஓவரில் அம்பத்தி ராயுடு அவுட்டாக, தோனி களமிறங்கினார்.

தோனி மைதானத்திற்கு வந்தபோது பின்னணியில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கபாலி’ படத்தில் மிகவும் பிரபலமான ‘நெருப்புடா நெருங்குடா’ பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மேலும், பேட்ட படத்தில் இடம்பெற்ற ‘கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விடமாட்டேன்’ என்ற வசனமும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்த இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் பாடியிருந்தார். இதையடுத்து இந்தப் பாடல் தோனி என்ட்ரியின்போது ஒலிபரப்பு செய்யப்பட்டதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இதேபோல், ஜடேஜா களத்தில் ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்த போது, ஜடேஜாவுக்கு பிடித்தமான பாட்டு என்று ‘வானத்தைப்போல’ படத்தில் வரும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் ஒலிப்பரப்பப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் அதிகளவில் யூ-ட்யூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வந்த இந்திய வீரர் அஸ்வின், ஒரு வீடியோவில், “ஜிம்மில் சமீபத்தில் ஜடேஜாவை சந்தித்தபோது, நான் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் பாடல்களில், இந்தப் பாடல் ரொம்ப பிடித்து போய்விட்டது. அதை மீண்டும் போட சொல்லிக் கேட்டார். என்னப் பாடல் என்று பார்த்தபோது விஜயகாந்தின் ‘வானத்தைப்போல’ படத்தில் வரும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும்’ பாடல்” என்று கூறியிருந்தார். அந்த வீடியோவையும், இணைத்து, ஜடேஜாவுக்கான பாடல் என்று விடிஜே என குறிப்பிடப்பட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐபிஎல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தல தோனிக்கு தனது டிஜே (DJ) மூலம் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்ததை அடுத்து டிஜே ஜென் பிரபலமாகியுள்ளார் என்ற கேப்ஷனுடன் இந்தப் பாடல்களை எல்லாம் ஒலிபரப்பியவரைப் பற்றிய சிறு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com