
ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் காபூல் பிரிமீயர் டி20 லீக் தொடரில், ஷாஹீன் ஹன்டர்ஸ் மற்றும் அபாசின் டிஃபெண்டர்ஸ் அணிகளுக்கிடையே 10வது லீக் போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஹண்டர்ஸ் அணி 5 ஓவரில் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த 21 வயதேயான கேப்டன் செதிகுல்லா அடல் மற்றும் மொஹமது இஷாக் இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்த, அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 130 ரன்களை எட்டியது. 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் என விளாசி 50 ரன்கள் அடித்திருந்த போது இஷாக் அவுட்டாகி வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய அபாசின் அணி கம்பேக் கொடுத்தது.
18 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்திருந்தது ஹண்டர்ஸ் அணி. களத்தில் 71 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார் கேப்டன் அடல். அபாசின் அணி வீரரான அமிர் ஷஷாய் 19வது ஓவரை வீசவந்தார். அப்போது தான் ஆட்டமே தலைகீழாக மாறியது.
அதற்கு முன் வீசிய 3 ஓவர்களில் 31 ரன்களுடன் 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் இடது கை ஆஃப் ஸ்பின்னரான அமிர் ஷஷாய். இதற்கடுத்து என்ன நடந்தது என்று வீசிய அவருக்கும் தெரியவில்லை, பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் தெரியவில்லை. காரணம், அனைத்து பந்தும் ஆகாயத்திலேயே இருந்தது, கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் அந்த 21 வயது இளைஞர் டி20 வரலாற்றில் ஒரு புதிய சாதனையையே படைத்துவிட்டார்.
வீசிய முதல் பந்தை ஷஷாய் நோ பாலாக வீச அந்த பந்தை தூக்கி சிக்சருக்கு அனுப்பினார் அடல். முதல் பந்திலேயே 7 ரன்கள் பெறப்பட்டது. அடுத்த பந்து ஒய்டாக வீச அது பவுண்டரி சென்றுவிட்டது. இதில் 5 ரன்கள் பெறப்பட்டது. அதற்கு பிறகான ஒவ்வொரு பந்தும் ஷஷாய் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவை.
ஒரு முழுமையான பந்துகூட வீசமால் 12 ரன்கள் சென்ற பிறகு வீசப்பட்ட ஓவருக்கான 6 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் அடல். ஸ்டிரை, லாங் ஆன், எக்ஸ்ட்ரா கவர் என அத்தனை திசையிலும் சிக்சர்கள் பறக்க 47 பந்துகளில் தன்னுடைய டி20 சதத்தை எடுத்துவந்தார் அடல். 6 பந்துகளில் 48 ரன்களை விட்டுக்கொடுத்த ஷஷாய் 4 ஓவர்களில் 79 ரன்களை வாரிக்குவித்தார். 21 வயதில் டி20 சதம், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள், ஒரே ஓவரில் 48 ரன்கள் என அடுத்தடுத்த பல சாதனைகளை டி20யில் பதிவு செய்து மிரட்டினார் அடல்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி சாதனையை படைத்திருந்தார் ருதுராஜ் கெயிக்வாட். உத்தரபிரதேசத்திற்கு எதிரான போட்டியில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டன் மற்றும் ஓபனரான ருதுராஜ் ஹெய்க்வாட், கடைசிவரை ஆட்டமிழக்காமல் சதத்தை பதிவு செய்து 147 பந்துகளில் 165* ரன்களில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, 49ஆவது ஒவரை வீச வந்த இடது கை பந்துவீச்சாளரான சிவா சிங்கிற்கு எதிராக 7 பந்துகளையும் (நோ பால் உட்பட) சிக்சருக்கு அனுப்பி, தனது இரட்டை சதத்தை பதிவு செய்து, இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்திருந்தார் ருதுராஜ். 7 சிக்சர்கள் என்ற அந்த சாதனையை தற்போது சமன் செய்திருக்கும் அடல், ஒரு ஓவரில் ருதுராஜ் அடித்த 43 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து 48 ரன்களை பதிவு செய்துள்ளார்.