‘ஐபிஎல் அணிகளின் தந்தை.. அதனால சென்னைக்குதான் அந்த சான்ஸ் இருக்கு’ - ஆகாஷ் சோப்ரா சொல்லும் காரணம்!

தோனி தலைமையிலான சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
MS Dhoni
MS DhoniPTI

16-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக செல்லும் அதேவேளையில் பாதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33-வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கான்வே 40 பந்துகளில் 56 ரன்களும், ரஹானே 29 பந்துகளை சந்தித்து 71 ரன்களும், ஷிவம் துபே 21 பந்துகளில் 50 ரன்களும் எடுத்திருந்தனர்.

MS Dhoni
‘தோனி அணியில் இருப்பதால்தான் இதெல்லாம் நடக்கிறது’ - புகழாரம் சூட்டிய கான்வே!

இதனைத் தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20வது ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில், அதிகப்பட்சமாக ஜேசன் ராய் 61 ரன்களும், ரிங்கு சிங் 53 ரன்களும் எடுத்திருந்தனர். 49 ரன்களில் சென்னை அணி வெற்றிப்பெற்றதுடன், தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்தது.

இந்நிலையில், சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர் தனது யூட்யூப் தளத்தில் பேசியதாவது, “சென்னை அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, எட்டு ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். எனவே மீதமுள்ள ஏழு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் போதும். அதிலும் நிறையப் போட்டிகள் அவர்களின் சொந்த மைதானங்களில் நடைபெறவுள்ளன. சொந்த மண்ணையும் தாண்டி நடக்கும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றிப்பெறுகிறார்கள்.

ஆகாஷ் சோப்ரா
ஆகாஷ் சோப்ரா

அதாவது மும்பையில் மும்பை அணியையும், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரையும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியையும் சென்னை அணி தோற்கடித்துள்ளது. மூன்று வெளி மைதானங்களில் அவர்கள் வென்றுள்ளனர். இதனால் லீக் சுற்று முடிவில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க முழு வாய்ப்புகள் உள்ளன. மேலும் தகுதிச் சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. அதனால் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு.

மீதமுள்ள 7 போட்டிகளில் 4-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. சிஎஸ்கே அணி வெவ்வேறு வகையில் அந்தந்த இடங்களுக்கேற்றவாறு சிறப்பாக விளையாடி வருகின்றது. ஐபிஎல் அணிகளின் அதாவது, அனைத்து அணிகளின் தந்தை சென்னை அணி எனலாம். டூவைன் பிராவோவுக்கு பதிலாக மதீஷா பதிரனாவை பயன்படுத்துகின்றனர். மஹீஷ் தீக்ஷனாவை டெத் ஓவர்களில் பந்துவீச வைத்துள்ளனர். ஆகாஷ் சிங்கை புதிய பந்து வீச்சாளராக மாற்றியுள்ளனர்.

MS Dhoni
‘மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது... ஆனால், தோனி மட்டுமே இதனை செய்கிறார்’ - ஆகாஷ் சோப்ரா

அஜிங்க்யா ரஹானேவை அதிரடி வீரராக ஆக்கிவிட்டார்கள். ஷிவம் துபே தனது வேகத்தை நிறுத்தாமல் பேட்டிங் செய்கிறார். சென்னை அணி அதை எப்படி சாத்தியப்படுத்தி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லா அணிகளுக்கும் தந்தையைப் போல முற்றிலும் வித்தியாசமாக அதிரடியை காண்பிக்கிறார்கள். கொஞ்சம் வீரர்களை வைத்து அற்புதமாக வேலை வாங்குவது என்றால், அதுதான் எம்.எஸ். தோனி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியின் வெற்றியை இனிமேல் நிறுத்துவது கடினம் என்றும் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது என்றும், தோனி மட்டுமே வீரர்களை உருவாக்குகிறார் என்றும் ஆகாஷ் சோப்ரா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com