5 பந்தில் 5 விக்கெட்கள்.. ஐபிஎல்லில் சர்ச்சைக்கு பெயர்போன திக்வேஷ் உள்ளூர் டி20யில் அசத்தல் பவுலிங்!
18வது ஐபிஎல் சீசனில் தனது சிறந்த பங்களிப்பைச் செய்த வீரர்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியைச் சேர்ந்த திக்வேஷ் ரதியும் ஒருவர். அவர், தனது முதல் சீசனில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் கவனம் பெற்றார். அதேநேரத்தில், அவர், தனது சர்ச்சைக்குரிய 'நோட்புக் செலிபிரேஷன்' கொண்டாட்டத்தால் அப்போது தலைப்புச் செய்தியாகவும் மாறினார்.
அதாவது, ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு முறையும் ஒரு வீரரின் விக்கெட்டை எடுக்கும்போது அவர் கையெழுத்து போடும் வித்தியாசமான கொண்டாட்ட முறையால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து தனது கொண்டாட்ட முறையை நிறுத்தவில்லை.
இந்த ஐபிஎல் சீசனில் வெறும் ரூ.30 லட்சத்துக்கு லக்னோ அணியால் எடுக்கப்பட்ட திக்வேஷ், 'நோட்புக் செலிபிரேஷன்' கொண்டாட்டம் காரணமாக தனது ஊதியத்தில் 30 சதவிகிதம் வரை அபராதமாகச் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர் உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி மீண்டும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதனை லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மொத்தமாக அந்தப் போட்டியில் 3.5 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்த திக்வேஷ் ரதி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.