ஒரு தோல்வி CSK-ஐ மோசமான அணியாக மாற்றாது.. இதெல்லாம் நடந்தா நிச்சயம் PlayOff செல்லும்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப்க்கும் தகுதிபெற்ற ஒரே அணியாக சிஎஸ்கே வலம் வருகிறது. இதில் 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியாக முத்திரை பதித்துள்ளது.
10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே அணி, எப்போதும் வலுவான ஒரு அணியாக அனைத்து போட்டிகளையும் வென்றுவிட்டு நேரடியாக ஃபைனலுக்கு சென்றதேயில்லை. மாறாக முதலில் 4 போட்டிகளை வென்றாலும் பின்னர் 3 போட்டிகளை வரிசையாக தோற்று, அரையிறுதிக்கு போகுமா? போகாதா? என்ற குழப்பத்தில் கடைசியாக அடித்துப்பிடித்து தான் பிளே ஆஃப்க்கு செல்லும் சிஎஸ்கே அணி.
5 கோப்பைகள் வென்ற ஐபிஎல் சீசன்களில் கூட 2018 ஐபிஎல்லில் மட்டுமே பெரிதாக தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வென்றது சிஎஸ்கே. மற்றப்படி மற்ற 2010, 2011, 2021 மற்றும் 2023 4 சீசன்களிலும் வரிசையாக 4 போட்டிகளில் கூட தோல்வியை கண்டிருந்த சிஎஸ்கே அணி, பதட்டமான சூழலில் தான் ஃபைனலுக்கு சென்று கோப்பை வென்றுள்ளது.
இந்த அணியெல்லாம் கோப்பை வெல்லுமா, டாடி ஆர்மி, இருக்க எல்லா போட்டியையும் தோத்துட்டு தான் வெளில போக போறாங்க என எத்தனை முறை வீழ்ந்தாலும், எத்தனை முறை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் மீண்டும் மீண்டும் எழுந்துவரும் மரபை உருவாக்கி வைத்துள்ளது சிஸ்கே அணி. அப்படிப்பட்ட அணியை தான், தற்போது ஒரு தோல்விக்காக கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ஐபிஎல் ரசிகர்கள்.
RCB போட்டியில் சிஎஸ்கே செய்த 3 தவறுகள்..
தோற்றது பிரச்னையா அல்லது ஆர்சிபி அணிக்கு எதிராக தோற்றது பிரச்னையா என்று பார்த்தால், 17 வருடமாக தோற்காத ஒரு இடத்தில், தோற்கவே கூடாது என்று நினைத்த ஒரு அணியிடம் தோற்றது மட்டுமே கடுமையான விமர்சனங்களை பெற்றுத்தர காரணமாக அமைந்துள்ளது.
பறிபோன மூன்று கேட்ச்கள்:
போட்டி கைமீறி போக முக்கிய காரணமாக அமைந்தது சிஎஸ்கே அணியின் மோசமான ஃபீல்டிங் மட்டுமே. ரஜத் பட்டிதார் ஒருவர் தான் ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரில் பெரிய விக்கெட்டாக இருக்கும் பட்சத்தில், அவருடைய 3 கேட்ச்களை விட்டபோதே சிஎஸ்கே அணி மோசமான நிலைமைக்கு சென்றுவிட்டது.
பட்டிதார் 17 ரன்கள் இருந்தபோது கேட்ச்சை சிஎஸ்கே ஃபீல்டர்கள் தவறவிட, அடுத்து ஓவர் வீசவந்த ஜடேஜாவுக்கு எதிராக 16 ரன்கள் விரட்டிய பட்டிதார் சிஎஸ்கே அணியின் பெரிய பவுலரை மீண்டும் பந்துவீச்சுக்கு எடுத்துவர அனுமதிக்கவே இல்லை.
மோசமான பேட்டிங்:
டாப் ஆர்டர் வீரர்கள் தொடங்கி மிடில் ஆர்டர் பேட்டிங் வரை யாருமே சோபிக்கவில்லை, இப்படி இருக்கும் பட்சத்தில் அணி கிட்டத்தட்ட தோல்வியை சந்தித்தபிறகு தோனி விளையாடவரவில்லை என்ற விமர்சனத்தை எப்படி ரசிகர்களால் வைக்க முடிகிறது என்பது தெரியவில்லை.
மோசமான கேப்டன்சி:
போட்டியின் தோல்விக்கு ருதுராஜின் சுமாரான கேப்டன்சியும் ஒரு முக்கிய காரணம். ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மட்டுமே அவர்களின் பேட்டிங்கில் வலுவான பக்கமாக இருக்கும் பட்சத்தில், அதற்கான பந்துவீச்சு பிளானிங் இல்லாமலேயே சிஎஸ்கே அணி களம்கண்டது. கேப்டனுக்கு எந்த பவுலரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. முதல் 5 ஓவருக்குள்ளாகவே 4 பவுலர்களை பயன்படுத்திய ருதுராஜ் என்ன செய்வதென்று குழம்பி போனார். மாறாக ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், பவுலிங் ரொட்டேஷனில் சிறப்பாக செயல்பட்டார்.
தோல்வியிலிருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும்?
டாப் ஆர்டர் மாற்றம்:
சிஎஸ்கே அணிக்கு வலுவான தொடக்கம் கிடைக்க வேண்டுமானால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராகவும், திரிப்பாத்தி 3வது வீரராகவும் களமிறங்க வேண்டும். திரிப்பாத்தி ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட கூடியவர் என்பதால் இந்த மாற்றம் சிஎஸ்கேவிற்கு சிறந்த மாற்றமாக இருக்கும்.
தீபக் ஹுடாவிற்கு பதிலாக விஜய் ஷங்கர்:
தீபக் ஹுடாவிடமிருந்து எந்தவிதமான ஆதரவும் கிடைக்கவில்லை மாறாக கைக்கு வரும் கேட்ச்களையும் கோட்டைவிடும் வீரராக இருக்கிறார். அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை களமிறக்கினால் சென்னை வீரரான அவர், சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக செயல்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. சிறந்த ஃபீல்டராகவும் இருக்கும் அவரிடமிருந்து 2 அல்லது 3 ஓவர்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அவர் குஜராத் அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சில நல்ல இன்னிங்ஸ்களையும் விளையாடி கொடுத்துள்ளார் என்பது கூடுதல் பலம்.
சாம் கரனுக்கு பதிலாக நாதன் எல்லிஸ்:
சாம் கரனிடமிருந்து உங்களுக்கு பேட்டிங்கில் ரன்கள் கிடைக்காத பட்சத்தில், அவருக்கு பதிலாக நாதன் எல்லீஸை களமிறக்கலாம். டெத் ஓவர்களில் யார்க்கர், சிறந்த வேரியேசன்களை கொண்டிருக்கும் எல்லீஸ் சிஎஸ்கே அணிக்கு சிறந்த டெத் பவுலிங் ஆப்சனாக இருப்பார். ஒருவேளை நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை எல்லீஸ் வீசியிருந்தால் சிஎஸ்கே அணிக்கு சாதகமான சூழல் கூட ஏற்பட்டிருக்கும்.
இந்த மாற்றங்களை கடந்து அஸ்வினிடமிருந்து நல்ல ஆட்டங்கள் கிடைக்கவில்லை என்றால் லெக் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபாலை களமிறக்கலாம், ஏற்கனவே ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னர் நூர் அகமது சிறப்பாக செயல்படும்போது லெக் ஸ்பின்னர் ஷ்ரேயாஸும் கைக்கோர்த்தால் நல்ல மாற்றமாக அமையும், ஷ்ரேயாஸ் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் நடந்தால் சிஎஸ்கே அணி நிச்சயம் பிளே ஆஃப்க்கு செல்லும் ஒரு அணியாக இருக்கும்.