Priyansh Arya
பிரியான்ஸ் ஆர்யாcricinfo

CSK-க்கு எதிராக 39 பந்தில் சதம்.. யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா? 6 பந்தில் 6 சிக்சர் அடித்தவரின் கதை!

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்தில் சதமடித்தார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் 24 வயது வீரரான பிரியான்ஸ் ஆர்யா. இவரின் அதிரடியால் 20 ஓவரில் 219 ரன்களை குவித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
Published on

17 வருட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான செயல்திறனை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் நீடித்து வருகிறது.

17 சீசன்களில் 2014 ஐபிஎல்லில் ஒரேயொருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணி, அதை தவிர தொடக்க ஐபிஎல் சீசனான 2008-ல் மட்டுமே அரையிறுதிப்போட்டிவரை முன்னேறியது. அதற்கு பிறகான 15 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட பிளே ஆஃப்க்கு தகுதிபெறாமல் எதற்கு இருக்கிறோம் என தெரியாமலே இருந்துவருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்

இந்த சூழலில் 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ரிக்கி பாண்டிங் இருவரும் சேர்ந்திருப்பது பஞ்சாப் அணியை பலம் வாய்ந்த அணியாக மாற்றியுள்ளது. நடப்பு சீசனில் ‘ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் இங்கிலீஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல் முதல் முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், ஷஷாங் சிங், யுஸ்வேந்திர சாஹல்’ வரை திறமைக்கு பஞ்சமே இல்லாமல் நிரம்பிவழிகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சிஎஸ்கே அணிக்கு எதிராக 39 பந்தில் சதம்..

அணியில் இருக்கும் சாம்பியன் வீரர்கள் அனைவரையும் கடந்து எக்ஸ் ஃபேக்டர் வீரராக 24 வயது பிரியான்ஸ் ஆர்யா என்ற இளம்புயல் 2025 ஐபிஎல் தொடரை கலக்கிவருகிறார். சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 9 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய பிரியான்ஸ் ஆர்யா 39 பந்தில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

39 பந்தில் சதம் விளாசிய 24 வயது வீரர்!
39 பந்தில் சதம் விளாசிய 24 வயது வீரர்!

24 வயதில் அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பிரியான்ஸ் ஆர்யா விராட் கோலியை வழிகாட்டியாக கொண்டவர். யார் இவர் விரிவாக பார்க்கலாம்..

யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?

விராட் கோலி பிறந்த மண்ணான டெல்லியைச் சேர்ந்தவர் பிரியான்ஷ் ஆர்யா. டெல்லியில் இருந்துவந்து உலகத்தையே மிரட்டிவரும் ஜாம்பவான் கிரிக்கெட்டர் விராட் கோலியின் கால்தடங்களை பின்தொடரும் பிரியான்ஸ் ஆர்யா, 2024 டெல்லி பிரீமியர் லீக் (DPL) தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை திரும்பிப்பார்க்கவைத்தார். அங்கு 10 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 198 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 67 சராசரியில் 608 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார். அதில் 2 சதங்களுடம் அடங்கும்.

பிரியன்ஸ் ஆர்யா
பிரியன்ஸ் ஆர்யா

இந்த நம்பமுடியாத சாதனை போதாது என்றால், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய ஆர்யா, வடக்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் பந்து வீச்சாளர் மனன் பரத்வாஜுக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு தன்னுடைய ஹிட்டிங் திறமையை நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சையத் முஷ்டாக் அலி டிராபியையும் விட்டுவைக்காத பிரியான்ஷ், அங்கு 176 ஸ்ட்ரைக் ரேட்டில் 325 ரன்களுடன் டெல்லியின் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். 

ஆர்சிபி உடன் போட்டிப்போட்டு எடுத்த பஞ்சாப்..

விராட் கோலியை ஐடலாக கொண்டிருக்கும் பிரியான்ஷ் ஆர்யா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாட விரும்புவதாக முன்னர் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் ஆர்சிபி அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. ஆனால் இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியான்ஸின் திறமைக்காக 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையிலிருந்து 3.8 கோடி ரூபாய் வரை சென்று அவரை அணியில் தக்கவைத்தது.

வரலாற்றில் இணைந்த பிரியான்ஸ் ஆர்யா!
வரலாற்றில் இணைந்த பிரியான்ஸ் ஆர்யா!

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் திறமையான இந்திய வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அந்த வரிசையில் நடப்பு ஐபிஎல்லின் சிறந்த கண்டுபிடிப்பாக பிரியான்ஷ் ஆர்யா இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com