ஐபிஎல் 2025 ஏலம் | மல்லிகா சாகர் செய்த தவறு... பணத்தை இழந்த அணிகள்!
ஐபிஎல் ஏலம் பல ஆண்டுகளாக நடைபெற்றாலும் இந்த முறை மல்லிகா சாகர் என்பவர் முதன்முறையாக ஏலத்தை வழிநடத்தினார். இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லருக்காக லக்னோ, ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதிய போது ஒரு கட்டத்தில் மல்லிகா சாகர் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் எனக்கூறுவதற்கு பதிலாக கவனக்குறைவாக 15 கோடியே 75 லட்சம் ரூபாய் என கூறிவிட்டார். இதனால் குஜராத் அணி 25 லட்சம் ரூபாயை கூடுதலாக செலுத்த நேர்ந்தது.
இதே போல அபிநவ் மனோகர் பெயர் ஏலத்திற்கு வந்த போதும் மல்லிகா கவனக்குறைவாக ஒரு தவறு செய்தார். இதனால் ஹைதராபாத் அணி கூடுதலாக 20 லட்சம் ரூபாய் செலுத்த நேரிட்டது. எனினும் ஏலத்தின் 2ஆவது நாளில் எந்த தவறும் இல்லாமல் ஏலத்தை மல்லிகா சாகர் வழிநடத்தினார்.
மும்பையை சேர்ந்தவரான மல்லிகா சாகர் கலைப்பொருட்களை ஏலம் விடுவதில் மிகுந்த அனுபவம் பெற்றவர். உலகப்புகழ் பெற்ற ஏல நிறுவனமான கிறிஸ்டியிலும் பயிற்சி பெற்றவர். இதைத்தொடர்ந்து கபடி பிரீமியர் லீக்கிலும் இவர் நடத்துநராக இருந்தார். கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட ஐபிஎல் ஏலத்தை முதன்முதலாக வழிநடத்தி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை மல்லிகா சாகர் ஈர்த்துள்ளார்.