‘தோனி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இதுதான்’ - ரகசியத்தை உடைத்த விராட் கோலி!

‘தோனி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இதுதான்’ - ரகசியத்தை உடைத்த விராட் கோலி!
‘தோனி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இதுதான்’ - ரகசியத்தை உடைத்த விராட் கோலி!

கேப்டன் பதவியிலிருந்து விலகியப் பிறகு தோனி மட்டும்தான் தன்னை தொடர்பு கொண்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார். அது அப்போது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தோனி தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பல நாட்களுக்குப் பின்னர் விராட் கோலி தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, அதிவேகமாக ரன்களை அடிப்பதிலும், சதம் வீசுவதிலும் வல்லவர். இதனால் அவரை ரசிகர்கள் ரன் மெஷின் என்றே அழைத்து வந்தனர். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சதம் அடிப்பதிலும், ரன் எடுப்பதிலும் விராட் கோலி தடுமாறி வந்தார். அத்துடன் அவரிடம் இருந்து கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2022 ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தனது மன அழுத்தம் குறித்தும், தோனி குறித்தும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

அப்போது பேசிய அவர், “டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நான் விலகியபோது, என்னுடன் விளையாடியவா்களிலேயே தோனி மட்டும் தான் என்னைத் தொடா்புக் கொண்டாா். அவரிடமிருந்து மட்டுமே எனக்கு குறுந்தகவல் வந்தது. பலா் தொலைக்காட்சிகளில் எனக்கு பரிந்துரை செய்துக் கொண்டிருந்தாா்கள். பலரிடம் எனது தொலைபேசி எண் இருந்தாலும் அவா்கள், அப்போது என்னை யாரும் தொடா்புக் கொள்ளவில்லை” என விராட் கோலி தெரிவித்திருந்தார்.

விராட் கோலியின் இந்தக் கருத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், பிசிசிஐ மூத்த அதிகாரி உள்பட பலரும் அவரை கடுமையாக சாடியிருந்தனர். எனினும், இதன்பிறகு விராட் கோலி மீண்டும் அதிவேகத்தில் ரன் அடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அந்தத் தொடரில் 5 இன்னிங்சில் 276 ரன்கள் அடித்து (1 சதம், 2 அரை சதம்) தன்னை மீண்டும் ரன் மெஷின் என்று நிரூபித்தார்.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் விராட் கோலி சாதனைப் புரிந்து வருகிறார். இதுவரை இந்தத் தொடரில் 5 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர், 246 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், தனது 34-வது பிறந்த நாளைக் கொண்டாடிய விராட் கோலி, தோனியின் குறுஞ்செய்தி குறித்து பேசியுள்ளார். அதில், “என்னை உண்மையாக அணுகிய ஒரே நபர் எம்.எஸ். தோனி மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில், என்னைவிட மூத்தவரான ஒருவருடன் இவ்வளவு வலுவான பிணைப்பு மற்றும் வலுவான உறவைப் பெற்றிருப்பது ஆசீர்வாதம். இது பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்த நட்பு.

அந்த குறுஞ்செய்தியில் தோனி குறிப்பிட்டுள்ள விஷயங்களில் ஒன்று, ‘நீங்கள் மன வலிமையானவராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், நீங்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும், தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போன்ற தோற்றம் கொடுத்துவிட்டால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க மறந்துவிடுவார்கள்’ என்று தோனி எனக்கு அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "நான் எப்போதுமே மிகவும் நம்பிக்கையுடனும், மன வலிமையுடனும், எந்த சூழ்நிலையையும் சகித்து, வழி காட்டக்கூடிய ஒருவராகவே பார்க்கப்படுகிறேன். சில சமயங்களில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்தக் கட்டத்திலும் வாழ்க்கையில், நீங்கள் இரண்டு படிகள் பின்வாங்கி, நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com