ஒரு ரன்னில் வெற்றியை கோட்டை விட்ட பாகிஸ்தான்.. கடைசி ஓவரில் கெத்து காட்டிய ஜிம்பாப்வே!!

ஒரு ரன்னில் வெற்றியை கோட்டை விட்ட பாகிஸ்தான்.. கடைசி ஓவரில் கெத்து காட்டிய ஜிம்பாப்வே!!
ஒரு ரன்னில் வெற்றியை கோட்டை விட்ட பாகிஸ்தான்.. கடைசி ஓவரில் கெத்து காட்டிய ஜிம்பாப்வே!!

ஒரு ரன்னில் வீழ்ந்த பாகிஸ்தான்!

டி20 கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணிக்கு இன்று மிகவும் பரிதாபகரமான நாள். ஏற்கனவே இந்திய அணியிடம் பெற்ற தோல்வியின் வடு ஆறுவதற்கு தற்போது ஜிம்பாப்வே அணியிடம் பலத்த அடி வாங்கியிருக்கிறது பாகிஸ்தான் அணி. அதுவும் 131 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் பறிதாபகரமாக தோல்வியை தழுவியிருக்கிறது. டி20 கிரிக்கெட் என்றாலே சுவாரஸ்ரங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதற்கு ஒரு பெஸ்ட் எடுத்துக்காட்டாக இன்றையப் போட்டி அமைந்துவிட்டது. அதுவும் கடைசி ஓவரில் இரு அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் திக் திக் நிமிடங்கள்தான். போட்டியில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.

பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தான்!

பலம் வாய்ந்த பந்துவீச்சை கொண்ட பாகிஸ்தான் அணியிடம் ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் கெத்தாக விளையாடினர். முதல் பவர் ப்ளேவில் 4 ஓவர்கள் வரை க்ரேக் எர்வின்னும், வெஸ்லி மதெவரேயும் விக்கெட்டை இழக்கவில்லை. ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில்தான் முதல் விக்கெட் வீழ்ந்தது. அதற்குள் 42 ரன்களை எட்டிவிட்டனர். ஆனாலும், அடுத்த ஒரு ரன்னில் இரண்டாவது விக்கெட்டும் வீழ்ந்து ஓபனர்கள் பெவிலியன் திரும்பினர். அப்பொழுது முதல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் கை ஓங்கியே இருந்தது. ஜிம்பாப்வே அணியின் ஒரு வீரரையும் 30 ரன்னை கூட எட்ட விடவில்லை. ஆனாலும், ஜீன் வில்லியம்ஸ் மட்டும் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.

அசத்திய மொகமது வஸிம்.. ஜொலிக்க தவறிய ஷாஹின் ஷா!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்பவர் ஷாஹீன் ஷா அப்ரிதி. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர். இவர் தனது வேகத்தால் எதிரணியை மிரட்டி திக்குமுக்காட செய்பவர். ஆனால், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விக்கெட் ஏதும் எடுக்க வில்லை. 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

ஆனால், முகமது வஸிம் பந்துவீச்சில் அசத்தினார். 4 ஓவர்கள் வீசிய வர் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். அதேபோல், ஷதப் கான் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட் சாய்த்தார். ஹரிஸ் ரஃப் 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

பாக். பேட்ஸ்மேன்கள் தூசியாக தட்டிவிடுவார்கள் என நினைத்தால்..

131 ரன்கள் தானே இலக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எளிதில் அடித்து போட்டியினை முடித்துவிடுவார்கள் என்றுதான் பலரும் நினைத்து இருந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் வெற்றி விகிதமே அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால், போட்டி துவங்கியது நடந்த கதையே வேறு. பாகிஸ்தான் அணியின் பலே தொடக்க வீரர்கள்தான். ரிஸ்வான், பாபர் அசாம் என்ற இரண்டு தூண்களே பாகிஸ்தானின் பலமாக பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் பாபர் அசாம் 4, ரிஸ்வான் 14 ரன்களில் நடையை கட்டி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த இப்திகர் அஹ்மதும் 5 ரன்னில் பெவிலியன் திரும்ப பாகிஸ்தான் அணி 36 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

என்னடா இது பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு வந்த சோதனை!

ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், ஷான் மசூத் விக்கெட்டை பறிகொடுக்காமல் பாகிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி மெதுவாக நகர்த்தி சென்றார். அவருக்கு சற்று நேரம் ஒத்துழைப்பு கொடுத்த ஷபாப் கான் 17 ரன்னில் வீழ்ந்தார். சிறப்பாக விளையாடி வந்த மசூத் 44 ரன்னில் விக்கெட்டை இழந்து மீண்டும் வெற்றி வாய்ப்பு சதவீதத்தை மேலும் குறைத்தார். அவர் ஆட்டமிழக்கும் போது பாகிஸ்தான் அணி 15.1 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு 29 பந்துகளில் வெறும் 35 ரன்கள்தான் தேவையாக இருந்தது. இன்னும் ஏதேனும் ஒரு ஓவரில் ஹிட் அடித்தாலும் போதுமானது. ரன் ரேட் மளமளவென குறைந்துவிடும். ஆனால்..

கடைசி ஓவரின் திக் திக் நிமிடங்கள்!!

பாகிஸ்தான் அணிக்கு கடைசி நேரத்தில் நம்பிக்கை அளித்தார் முகமது நவாஸ். அவர் விக்கெட்டை இழக்காமல் ஒவ்வொரு ரன்னாக எடுத்து வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். 3 ஓவர்களில் 29 ரன்கள், 2 ஓவர்களில் 22 என்ற வரிசையில் கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முந்தைய ஓவரில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் நவாஸ்.

கடைசி ஓவரின் முதல் பந்தினை நவாஸ் எதிர்கொண்டார். முதல் பந்திலே அவர் மூன்று ரன்களை எடுத்தார். இரண்டாவது பந்தினை எதிர்கொண்ட முகமது வசிம் பவுண்டரி விளாசி 4 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு. இந்த நிலையில் நிச்சயம் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்றே எல்லோரும் நினைத்திருப்பார்கள். களத்தில் நவாஸ் கூட இருக்கிறார். ஒரு பவுண்டரி அடித்தால் கூட போதுமானது.

ஜிம்பாப்வேவின் கைக்கு மாறிய ஆட்டம்!!

மூன்றாவது பந்தில் இருந்துதான் தன்னுடைய வித்தையை காட்டினார் ஜிம்பாப்வேயின் இவான்ஸ். மூன்றாவது பந்தில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார். இப்பொழுது மூன்று பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே. களத்தில் நவாஸ். ஆனால், நான்காவது பந்தை டாட் பந்தாக மாற்றினார் இவான்ஸ். கடைசி இரண்டு பந்துகளில்தான் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஐந்தாவது பந்தை தூக்கி அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார் நவாஸ். பாகிஸ்தான் ரசிகர்களின் இதயமே சற்று நொறுங்கி இருக்கும் இந்த தருணத்தில். ஆனாலும், ஒரு பந்தில் மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில் 2 ரன்கள் எடுத்தாலும் டிரா ஆகிடும் நிலை என்பதால் சற்றே பாகிஸ்தான் ரசிகர்கள் தெம்பாக இருந்திருப்பாலும். ஆனாலும், அந்த பந்திலும் ஷாக்கோ.. ஷாக்.. ஷாஹீன் ஷா இரண்டாவது ரன் ஓட முயன்ற போது ரன் அவுட் ஆகினார். ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

தகுதிச் சுற்று ஆட்டங்களில் கத்துக் குட்டி அணிகள் பலவும் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

7வது இடத்தில் பாகிஸ்தான்!

இந்த தோல்வியின் மூலம் குரூப் 2 அணியின் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி 7வது இடத்திற்கு சென்றுவிட்டது. ஜிம்பாப்வே அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி முதலிடத்திலும் தென்னாப்ரிக்க அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணிக்கு அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. ரன்ரேட்டும் முக்கியமானது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com