ஐந்து நிமிடங்களில் விற்று தீர்ந்த டி20 உலகக் கோப்பை டிக்கெட்! #IndVsPak

ஐந்து நிமிடங்களில் விற்று தீர்ந்த டி20 உலகக் கோப்பை டிக்கெட்! #IndVsPak
ஐந்து நிமிடங்களில் விற்று தீர்ந்த டி20 உலகக் கோப்பை டிக்கெட்! #IndVsPak

டி20 உலகக் கோப்பை 2022-க்கான தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

ஐசிசி நடத்தும் 2020-க்கான டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா காரணமாக அப்போது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் துவங்கி, நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை ஆஸ்திரேலியா முதன் முதலாக நடத்துகிறது. அடிலெய்டு, பிரிஸ்பேன், ஹோபர்ட், மெல்போர்ன், ஜிலாங்க், பர்த், மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. சொந்த நாட்டில் முதன்முதலாக நடைபெறுவதால், அந்நாட்டு ரசிகர்கள், டி20 உலகக் கோப்பை போட்டியைக் காண மிகவும் ஆவலுடன் உள்ளனர். ரசிகர்களும் இந்தப் போட்டியைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை அண்மையில் ஐசிசியும் வெளியிட்டு இருந்தது. 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், மொத்தம் 45 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் 45 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் www.t20worldcup.com என்ற தளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இதில், சூப்பர் 12 சுற்றில், குரூப் 2 பிரிவில் உள்ள இந்திய அணியும், அதேபிரிவில் உள்ள பாகிஸ்தான் அணியும், தங்களது முதல் போட்டியில் மோதுகின்றன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இதையடுத்து இந்தப் போட்டியின் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த 5 நிமிடங்களில், விற்று தீர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதேபோல், அக்டோபர் 27-ம் தேதி நடைபெற இருக்கும் இந்தியாவின் மற்றொரு போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்பனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. சிட்னியில் நடக்கும் அந்தப் போட்டியில் குரூப்-ஏ பிரிவில், 2-வது இடம் பெறும் அணியுடன், இந்திய அணி மோதுகிறது. துபாயில் 2021 டி20 உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில், படுதோல்வியை தழுவிய ஒரு வருடத்திற்குள் இந்திய அணி, பாகிஸ்தானை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள உள்ளது.

இரு அணிகளும் கடைசியாக 2015 ஒருநாள் உலகக் கோப்பையின் போது அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்தன. அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது. போட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மிச்செல் என்ரைட் இதுபற்றி கூறுகையில், இதுவரை பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்களால் வாங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com