டி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்?

டி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்?
டி20 உலகக்கோப்பை:  இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்?
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் உடன் நேரடியாக கிரிக்கெட் போட்டிகள் விளையாட பிசிசிஐ மறுத்து வருகிறது. உலகக் கோப்பை, சாம்பியன்டிராஃபி, ஆசியக் கோப்பை போன்று ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும். அந்த வகையில், 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 24-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால் இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசியாக இரு அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதே இல்லை என்ற வரலாறு தொடர்ந்து வருகிறது. ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் மட்டும் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது.
ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 7 முறை இந்திய அணியுடன் மோதி 7 முறையும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் 5 முறை மோதி 4 போட்டிகளில் பாகி்ஸ்தான் தோற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.
இதனால் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியின் போதும் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்படும். இந்திய அணியை உலகக் கோப்பையில் வீழ்த்தினால் பலவிதமான பரிசுகளும் அந்நாட்டு வீரர்களுக்கு அறிவி்க்கப்பட்டுள்ளன. அதனால் வரவிருக்கும் ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளிலும் கவனிக்கத்தக்க வீரர்களாக 5 பேர் வலம் வருகின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
விராட் கோலி:
2007-ம் ஆண்டு மகேந்திரசிங் தோனி தலைமையில் உலகக் கோப்பைக்கு முத்தமிட்ட இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் படையெடுத்துள்ளது. இன்னும் தனது கேப்டன்ஷிப்பில் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் விராட் கோலிக்கு அந்த ஏக்கத்தை தணிக்க இது அருமையான வாய்ப்பு. இந்த உலககோப்பையுடன் அவர் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவது நினைவு கூரத்தக்கது. கோலியின் ஆக்ரோஷமான தலைமைத்துவம் எதிரணியை காலி செய்யும் என எதிர்பார்க்கலாம். ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் கோலி, டி20 கிரிக்கெட்டில் 52.65 சராசரியுடன் 3,159 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் ஆஸம்:
இந்திய கேப்டன் விராட் கோலியை போலவே பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் களத்தில் ஆக்ரோஷமாக இயங்குபவர் என்பதால் இந்த முறை போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்த கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ‘கடந்த காலத்தைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. இந்த முறை இந்திய அணியைத் தோற்கடிப்போம்’ என சூளுரை சொல்லியிருக்கிறார் பாபர் ஆஸம். ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பாபர் ஆஸம், டி20 கிரிக்கெட்டில் 46.89 சராசரியுடன் 2,204 ரன்களை எடுத்துள்ளார்.
ரோகித் ஷர்மா:
உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான ரோகித் ஷர்மா, வரவிருக்கும் ஆட்டத்தில் வழக்கம்போல் தொடக்க வீரராக களமிறங்குவதை கேப்டன் கோலி உறுதி செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ரன் வேட்டையை இந்த ‘ஹிட்மேன்’ தொடர்வார் என நம்பலாம். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 8 ஆட்டங்களில் 5 சதங்களை விளாசி, ஒரு உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அதற்குமுன் இலங்கையை சேர்ந்த குமார் சங்கக்காரா, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் 4 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
ரோகித் ஷர்மா சதமடித்து விட்டாலே அவரது ரசிகர்கள் இன்று இரட்டை சதம் அடிப்பார் அல்லது அடிக்கமாட்டார் என விவாதிக்கத் துவங்கி விடுவார்கள். ஏனெனில் ரோகித்தின் ‘வரலாறு’ அப்படி. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டார் எனில் அவரின் விக்கெட்டை தூக்குவது எந்த ஒரு அணிக்கும் எந்த ஒரு பவுலருக்கும் மிகப்பெரிய சவால். மேலும் ரன்களை விரைவாக குவிக்கத் துவங்குவது அவரது தனிப்பாணி. ஐசிசி டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள், 22 அரை சதங்களுடன் 2,864 ரன்கள் குவித்திருக்கிறார் ரோகித் ஷர்மா.
ஃபகார் சமான்:
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பவுலர்களை பந்தாடிய ஃபகார் ஜமான், 114 ரன்கள் அடித்து, அணியின் ஸ்கோர் 338 ஆக உயர்வதற்கு காரணமாக இருந்தார். அந்த இலக்கை துரத்திய இந்திய அணி 158 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற ரிக்கார்டும் ஜமான் வசமுள்ளது. இந்திய அணிக்கெதிரான ஆட்டத்திலும் ஃபகார் ஜமான் சோபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்பிரித் பும்ரா:
இந்திய பந்துவீச்சின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. டெத் ஓவர்களில் உலக அளவில் மிகவும் சிறப்பான பவுலர்களில் ஒருவராக பும்ரா திகழ்கிறார். ரன்களை கட்டுப்படுத்துவதிலும், விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் பும்ராவின் பங்கு மிக முக்கியமானது. ஐசிசி டி20 கிரிக்கெட்டில் 49 போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com