சூப்பர் 12-ல் இந்தியாதான் டாப்! அரையிறுதியில் யார், யாருடன் மோதுகிறார்கள்? - முழுவிவரம்!

சூப்பர் 12-ல் இந்தியாதான் டாப்! அரையிறுதியில் யார், யாருடன் மோதுகிறார்கள்? - முழுவிவரம்!
சூப்பர் 12-ல் இந்தியாதான் டாப்! அரையிறுதியில் யார், யாருடன் மோதுகிறார்கள்? - முழுவிவரம்!

உச்சக்கட்ட பரபரப்பில் டி20 உலகக் கோப்பை:

உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர். இன்னும் மூன்றே மூன்று போட்டிகள்தான். யார் 2022 ஆம் ஆண்டிற்கான கோப்பையை வசப்படுத்தப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். அரையிறுதி ஆட்டம் நாக் அவுட் ஆட்டம் என்பதால் பரபரப்பு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. வென்றால் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இல்லையென்றால் வெளியேற வேண்டியதுதான்.

இன்றைய 3 போட்டிகளில் நடந்தது என்ன?

1. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் தென்னாப்ரிக்க அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியுற்று அரையிறுதிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது. தென்னாப்ரிக்கா வெளியேறியது இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.

2. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தன்னுடைய அரையிறுதி வாய்ப்பை கெத்தாக உறுதி செய்தது.

3. மூன்றாவது போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக வீழ்த்தியது. சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ரசிகர்களுக்கு மீண்டுமொருமுறை விருந்துபடைத்தார்.

அரையிறுதியில் யார், யார் மோதுகிறார்கள்?

சூப்பர் 12 சுற்றின் முடிவில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி முதல் இடத்தையும், இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல், குரூப் 2 பிரிவில் இந்திய அணி முதல் இடத்தையும், பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

  • குரூப் 1 பிரிவில் முதல் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும், குரூப் 2-ல் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும் நவம்பர் 9 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி சிட்னி நகரில் நடக்கிறது.
  • அதேபோல், குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், குரூப் 1 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் நவம்பர் 10 ஆம் தேதி பிற்பகர் 1.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன. இந்தப் போட்டி அடிலெய்டில் நடக்கிறது.

அரையிறுதியின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன.

கெத்தாக அரையிறுதியில் இந்திய அணி!

சூப்பர் 12 சுற்றின் முடிவுகளை பொறுத்தவரை இந்திய அணிக்கு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது, 8 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டு பிரிவுகளையும் சேர்த்து முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 7 புள்ளிகள் பெற்றன. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. ரன் ரேட்டை பொறுத்தவரை நியூசிலாந்து 2.113 உடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி 1.319 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டங்கள்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் பல போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. சில போட்டிகளில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு தலா ஒரு ஆட்டங்கள் மழையால் ரத்து ஆகியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் என குரூப் 2 பிரிவில் தான் அதிக அணிகள்தான் முழுமையாக போட்டிகளை விளையாடின. குரூப் 1 பிரிவில் இலங்கை அணி மட்டும் அனைத்து போடிகளையும் விளையாடியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com