டி20: தோற்றாலும் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பிற்கு பிரச்னை கொடுத்த அயர்லாந்து .!
இன்று நடந்த சூப்பர் 12 போட்டியில் அயர்லாந்து அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
அரையிறுதி வாய்ப்பிற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து அணியை விட நெட் ரன்ரேட் ஆஸ்திரேலியா அணிக்கு குறைவாக இருப்பதால், இன்று நடக்கும் போட்டியில் அயர்லாந்து அணியை விரைவாகவே வீழ்த்தி இங்கிலாந்தின் ரன்ரேட்டை விட உயர்த்த வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஆடியது ஆஸ்திரேலியா அணி.
இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் ஓபனர் டேவிட் வார்னரை 3 ரன்களுக்கு வெளியேற்றினார் பாரி மெக்கர்தி. பின்னர் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் நிலைத்து நின்று விளையாட, மறுபுறம் அதிரடி காட்டிய மிட்சல் மார்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 28 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அதற்கு பிறகு வந்த மேக்ஸ்வெல் 13 ரன்களுக்கு வெளியேற, பின்னர் வந்த ஸ்டொய்னிஸ் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிக்காட்டிய கேப்டன் பிஞ்ச் அதிரடிக்கு திரும்ப 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி அரைசதம் அடித்த அவர் 63 ரன்களுக்கு வெளியேற, இறுதியாக 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 179 ரன்கள் சேர்த்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆட்டம் காட்டினார்கள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள். அயர்லாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஆண்டிரிவ் பால்பிர்னே இருவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். பின்னர் பந்துவீசிய மிட்சல் ஸ்டார்க் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்ட, 4 ஓவர் முடிவில் 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அயர்லாந்து அணி. ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய விக்கெட் கீப்பர் லார்கன் டக்கர் நிலைத்து நின்று விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு தொல்லை கொடுத்தார். பின்னர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய லார்கன் டக்கர் குறைவான ரன்களில் அயர்லாந்து அணியை சுருட்டி ரன்ரேட்டை உயர்த்தும் ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்தார். 18.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 137 ரன்கள் மட்டுமே அடித்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 9 பவுண்டரிகள், 1சிக்சர் என விளாசிய லார்கன் டக்கர் 48 பந்துகளில் 71 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணியை நெட் ரன்ரேட்டில் பின்னுக்கு தள்ளி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க அயர்லாந்து அணியை 104 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கனவை தகர்த்துள்ளது அயர்லாந்து அணி. நாளை நடைபெற இருக்கும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு கிட்டதட்ட முற்றிலும் பறிபோய்விடும்.
நாளை நடக்கவிருக்கும் 2 போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.