ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தமிழக வீரர் தங்கராசு நடராஜனை 3 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமே இல்லையென்ற போதிலும், வேகப்பந்து வீச்சில் காட்டிய திறமையால் ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் தங்கராசு நடராஜன் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். அவரின் அடிப்படை விலையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 3 கோடி ரூபாய்க்கு நடராஜனை ஏலம் எடுத்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த 25 வயதான நடராஜன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், தமிழக அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து அவரது தாயார் சாந்தா புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், நாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். நேரத்திற்கு சாப்பாடு கூட அவருக்கு கொடுக்க முடியாது. இந்த நிலையிலும் நடராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் என்பதால் கிரிக்கெட் பேட் வாங்கி கொடுத்தோம். அவரும் சிறப்பாக விளையாடினார். விளையாட்டில் மட்டுமே ஆர்வமாக இருந்ததால் இன்று பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். எனது மகன் மேலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்து நாட்டிற்காக விளையாடுவார் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.