
சிட்னியில் நடந்து நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் ’சுவர்’ புஜாரா 193 ரன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 159 ரன், மயங்க் அகர்வால் 77 ரன், ஜடேஜா 81 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில், லியான் 4, ஹசல்வுட் 2, ஸ்டார்க் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸும் உஸ்மான் கவாஜாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 24 ரன் எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 19 ரன்னுடனும் கவாஜா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கவாஜா 27 ரன் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஸ்சாங்னே வந்தார். அவரும் ஹாரிஸும் சிறப்பாக ஆடி கொண்டிருந்தனர். அணியின் ஸ்கோர் 128 ஆக இருந்தபோது ஹாரிஸ் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அவர் 79 ரன் எடுத்திருந்தார். அடுத்து மார்ஷ் களமிறங்கினார். அவரை (8 ரன்)யும் ஜடேஜா வீழ்த்த அடுத்து டிராவிஸ் ஹெட், மார்னஸுடன் இணைந்தார்.
இருவரும் நிதானமாக ஆடினார். முகமது ஷமியின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து மார்னஸ் ஆட்டமிழந்தார். அவர் 38 ரன் எடுத்திருந்தார். அடுத்து டிராவிஸ் ஹெட் விக்கெட்டை குல்தீப் சாய்த்தார். பின்னர் வந்த கேப்டன் பெய்னும் குல்தீப் சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. ஹேண்ட்ஸ்கோம்பும் (28) கம்மின்ஸும் (25) ஆடி கொண்டிருந்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் வீரர்கள் பெவிலியன் திரும்பினர். ஆட்டம் நிறுத்தப்பட்டது.