ரவிக்குமார் தாஹியா போட்டியை பார்த்து சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்

ரவிக்குமார் தாஹியா போட்டியை பார்த்து சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்
ரவிக்குமார் தாஹியா போட்டியை பார்த்து சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவின் மல்யுத்த போட்டியை முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமார் திஹார் சிறையில் இருந்தவாறு டிவியில் பார்த்து உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த விளையாட்டில் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவின் மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்துள்ளார் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவுர் வுகேவ் (Zaur Uguev) உடனான போட்டியில் 7 - 4 என்ற வித்தயாத்தில் ரவி தோல்விபெற வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ரவிக்குமாரின் சாதனையை அடுத்து தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வெற்றியின் மூலம் 2012-ல் வென்ற சுஷில் குமாருக்குப் பிறகு வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது மல்யுத்த வீரர் ரவி தஹியா என்ற பெருமையை பெற்றார். இதற்கிடையே, ரவி விளையாடிய இன்றையப் போட்டியை முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லி திஹார் சிறையில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். அப்போது ரவி தஹியா தோல்வி அடைந்ததை பார்த்த சுஷில் குமார் உணர்ச்சிவசப்பட்டபடி இருந்தார் என்று திஹார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுஷில் குமார் மற்றும் ரவிக்குமார் தாஹியா இருவரும் டெல்லியில் உள்ள சத்ராசல் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுத்தவர்கள். அதிலும் ரவிக்குமார் தாஹியா, சுஷில்குமாரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு வளர்ந்தவர். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சுஷில்குமார் 2008-இல் ஒலிம்பிக் பதக்கம் வென்றதை பார்த்து 'நானும் அதே போல நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும்' என சூளுரைத்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளார் ரவி.

மறுபுறம் அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த சுஷில் குமாரோ, சொத்து தகராறில் சக மல்யுத்த வீரரான சாகர் தன்கர் ராணா என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் பயிற்சிபெற்று வந்த சத்ராசல் ஸ்டேடியத்தின் கார் பார்க்கிங்கில் வைத்து இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணாவை கொலை செய்திருந்தார் சுஷில் குமார். இந்தக் கொலை குற்றத்தில் சுஷில் குமார்தான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபகிறார். இந்த குற்றத்தால், 18 நாள் தலைமறைவாக இருந்து வந்த சுஷிலை சில மாதங்கள் டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ரவி தஹியா போட்டியை சத்ராசல் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் சுமார் 100 மல்யுத்த வீரர்களும் ஒன்றாக இந்த விளையாட்டை பார்த்து ரசித்த நிகழ்வும் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com