என்னா அடி! நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி சதம் விளாசிய சூர்யகுமார்; தொடரும் அதிரடி

என்னா அடி! நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி சதம் விளாசிய சூர்யகுமார்; தொடரும் அதிரடி

என்னா அடி! நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி சதம் விளாசிய சூர்யகுமார்; தொடரும் அதிரடி
Published on

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணி முதலில் பேட்டிங் - சொதப்பிய ரிஷப்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளேவிலேயே ரிஷப் பண்ட் அவுட்டாகி வெளியேற, நல்ல தொடக்கத்தை கொடுத்த இஷான் கிஷன் 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சூரியகுமார் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கூட்டணி அமைத்தனர். அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சூரியகுமார் யாதவ் அரைசதம் அடிக்க, ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என அடித்து அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் 13 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

சதம் விளாசிய சூர்யகுமார்!

பின்னர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ், நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை கிரவுண்டின் நாலாபுறமும் சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 170 ரன்களே இந்திய அணி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூரியகுமார் தொடர்ந்து அதிரடி காட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை குவித்தது இந்திய அணி.

இரண்டாவது ஹாட்ரிக் - சவுத்தி அசத்தல்

19ஆவது ஓவர் வீச வந்த நியூசிலாந்து பவுலர் டிம் சவுத்தீ ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என மூவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்காவிற்கு பிறகு டி20 போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டியுள்ளார் டிம் சவுத்தீ.

ஒரே வருடத்தில் 2 டி20 சதங்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மாவிற்கு பிறகு அடைந்துள்ளார் சூரியகுமார் யாதவ். இன்னும் இந்த ஆண்டுக்கான போட்டிகள் மீதமுள்ளதால் அடுத்த டி20 சதம் அடித்து புதிய சாதனையை படைப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

பெர்குசன் ஓவரை பொளந்துகட்டிய சூர்யகுமார்

நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் அனைவரது பந்துகளையும் சூர்யகுமார் ரன்களாக பவுண்டரிகளாக, சிக்ஸர்களாக மாற்றினார். குறிப்பாக பெர்குசன் 14 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். சாண்டர் ஓவரில் 10 பந்துகளில் 22 ரன்களும், மிலன் ஓவரில் 8 பந்துகளில் 18 ரன்களும், சோதி ஓவரில் 13 பந்துகளில் 17 ரன்களும், சவுத்தி ஓவரில் 5 பந்துகளில் 15 ரன்களும் குவித்தார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வீசிய முதல் ஓவரிலேயே பின் ஆலன் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார் புவனேஷ்வர் குமார். இருப்பினும் வில்லியம்சன், கான்வே விக்கெட் இழப்பை தடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த 7 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது நியூசிலாந்து அணி.

உலகக் கோப்பையில் அதிரடி காட்டிய சூர்யகுமார்

முன்னதாக நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் தன்னுடைய அதிரடியால சூர்யகுமார் யாதவ் பலரது மனங்களை கொள்ளை கொண்டார். 6 போட்டிகளில் விளையாடி 239 ரன்கள் குவித்தார். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடமும் பிடித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com