சூர்யா, ராகுல், கோலி அதிரடி சரவெடி - இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!

சூர்யா, ராகுல், கோலி அதிரடி சரவெடி - இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!
சூர்யா, ராகுல், கோலி அதிரடி சரவெடி - இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஓப்பனர்களாக ராகுலும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ரபாடா வீசிய முதல் பந்திலேயே ராகுல் பவுண்டரி விளாசி இந்தியாவின் இன்னிங்சை அட்டகாசமாக துவக்கினார். அடுத்து பர்னெல் வீசிய 2வது ஓவரில் ரோகித், ராகுல் இருவரும் பவுண்டரி விளாசி அசத்தி ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்த துவங்கினர். அடுத்த வந்த பவுலர்களையும் இந்த கூட்டணி பதம்பார்க்க இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 49 ரன்களை குவித்து இருந்தது.

அடுத்து கேசவ் மகாராஜ். நார்ட்ஜே இருவரும் மாறி மாறி பந்துவீசிய போதும் இந்திய அணி வேகத்தை தடுத்து நிறுத்த தென் ஆப்பிரிக்காவால் இயலவில்லை. குறிப்பாக நார்ட்ஜே வீசிய 8வது ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 21 ரன்களை இந்த கூட்டணி சிதறத்தது. ஒருவழியாக ரோகித் விக்கெட்ட கேசவ் மகாராஜ் வீழ்த்த, 10 ஓவரில் 96 ரன்களை குவித்தது இந்தியா.

அடுத்து கோலியுடன் இணை சேர்ந்த ராகுல், அதிரடியை தொடர்ந்து 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்த சில பந்துகளில் ராகுலும் விக்கெட்டை பறிகொடுக்க கோலியுடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ். கோலி நிதானித்து ஆடத்துவங்க, அதிரடி கையில் எடுத்த சூர்யகுமார் நாலாப்புறமும் பந்துகளை சிதறடித்து 18 பந்துகளில் அரைசதம் கடந்து மலைக்க வைத்தார்.

இதையடுத்து கோலியும் அதிரடிக்கு திரும்பி பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு அசத்தினார். சூர்யகுமார் 61 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆக, அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். அவரும் தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு எமனாக மாறி 7 பந்துகளில் 17 ரன்களை குவித்தார்., ஒட்டுமொத்தமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. இதையடுத்து 238 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறத

முன்னதாக சொந்த மண்ணில் இதுவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றதில்லை. இந்த வரலாற்றை மாற்றி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com