`உலககோப்பையில் இந்தியாவின் முக்கிய வீரராக இவர்தான் இருப்பார்'- சுரேஷ் ரெய்னா கணிப்பு!

`உலககோப்பையில் இந்தியாவின் முக்கிய வீரராக இவர்தான் இருப்பார்'- சுரேஷ் ரெய்னா கணிப்பு!
`உலககோப்பையில் இந்தியாவின் முக்கிய வீரராக இவர்தான் இருப்பார்'- சுரேஷ் ரெய்னா கணிப்பு!

இடது கை பந்துவீச்சாளர்கள் எப்போதும் இந்தியாவிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர்களாகவும், பெரிய பலமாகவும் இருந்துள்ளனர் என்றும், இந்த உலககோப்பையில் இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் சிறந்த வீரராக இருப்பார் என்றும் இந்தியாவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

அணியில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தால், உண்மையில் அது அணிக்கு பெரிய பலம் என்று தெரிவித்துள்ள ரெய்னா, அர்ஸ்தீப் சிங் நமக்கான அதிர்ஷ்டத்தை மாற்றுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக உலககோப்பையில் இருந்து விலகிய நிலையில், இந்தியாவின் பந்துவீச்சு இந்த உலககோப்பையை தாக்கு பிடிக்குமா என்றும், அனுபவமின்மை இல்லாத பந்துவீச்சாளர்கள் கோப்பையை வென்று தருவார்களா என்ற பல கேள்விகள் இந்திய அணியின் பந்துவீச்சின் மேல் வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது பும்ரா இருந்த இடத்தில் மாற்று வீரராக இந்தியாவின் அனுபவமிக்க வீரர் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஷமி விளையாடியிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து அவர் எந்த சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் அனுபவமிக்க வீரரான முகமது ஷமியிடம் சுற்றி இருக்கும் விஷயங்களை மாற்றியமைக்கும் அனுபவம் இருப்பதாக ரெய்னா கூறியுள்ளார்.

இந்தியாவின் பந்துவீச்சு குறித்து பேசியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ”அணியில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது, உண்மையில் அணிக்கு பெரிய பலமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய ஒன்றாகவும் இருக்கிறது. 2007ல் டி20 உலக கோப்பையை வென்றபோது, இந்திய அணியில் இர்ஃபான் பதான் மற்றும் ஆர்பி சிங் இருந்தனர். 2011 உலககோப்பையில், ஜாகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா இருந்தனர். இந்த உலககோப்பையில், நம்மிடம் இந்த பையன் அர்ஷ்தீப் சிங் இருக்கிறார். அவர் நமக்கான அதிர்ஷ்டத்தை மாற்றுவார் என்று நான் நம்புகிறேன். இந்த உலககோப்பையில் இந்தியாவின் முக்கிய வீரராக அர்ஸ்தீப் சிங் இருப்பார்” என்று கூறியுள்ளார்.

மேலும் ஷமி குறித்து பேசியிருக்கும் அவர், “ உங்களால் பும்ராவிற்கு நிகரான ஒரு வீரரை கொண்டு வர முடியாது. ஆனால் ஷமி தனது சிறந்த ஆட்டத்தை அணிக்காக கொண்டு வருவார். அவருக்கு போதுமான அனுபவம் உள்ளது. ஒய்ட் பால், ரெட் பால் மற்றும் பிங்க் நிற பந்து என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவருக்கு அந்த திறமை உள்ளது மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு தேவையான கேரக்டர் உள்ளது மற்றும் அவர் அதை கடந்த காலத்தில் செய்து காட்டியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

மேலும் ரெய்னா, “பும்ரா இல்லாத நிலையில், இந்தியாவின் பந்துவீச்சுத் துறை குறித்து கவலைகள் இருந்தன, ஆனால் அணியை ஆஸ்திரேலியாவுக்கு முன்கூட்டியே அனுப்பும் பிசிசிஐயின் முடிவு வீரர்களுக்கு பயனளிக்கும். வீரர்களுக்கு உலககோப்பைக்கான போட்டிகளுக்கு நிறைய நேரம் இருக்கிறது. போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பு அணியை அனுப்பி பிசிசிஐ ஒரு சிறந்த முடிவை எடுத்துள்ளது. இப்படியான ஒரு விஷயம், இதற்கு முன்பு நடந்தது இல்லை. இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சூழ்நிலையை பழகுவதற்கு, இது சிறப்பானதாக அமையும்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com