ரெய்னாவும்.. கொரோனாவும்.. - சிஎஸ்கே-வின் சோதனைகள்..!
13வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டின் மார்ச் 29ஆம் தேதி தொடங்கயிருந்தது. ஆனால் மார்ச் இறுதி வாரத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால் ஏப்ரல் மாதத்திற்கு ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் கொரோனாவின் வேகம், ஐபிஎல்-க்கு சோகம் என்ற நிலை உருவானது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு நடைபெறுமா ? என்ற நிலைக்கு சென்றது. இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை, குறிப்பாக தோனியின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. ஏனென்றால் தோனி ஐபிஎல் ஆடுவார், பின்னர் டி20 உலகக் கோப்பையில் ஆடுவார் என ரசிகர்கள் கனவுக் கோட்டை கட்டி வைத்திருந்தனர். ஆனால் ஐபிஎல் தேதி அறிவிக்கப்பட்டபாடில்லை.
பின்னர் யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகம்) ஐபிஎல் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவல் பிசிசிஐ தரப்பால் உறுதியும் செய்யப்பட்டது. அதற்குள் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தோனி தனது ஓய்வையே அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்பு தோனியின் ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக சில நிமிடங்களிலேயே ரெய்னா தனது ஓய்வை அறிவித்தார். இந்த தகவல் சென்னை ரசிகர்களை உருக்கத்தில் உறைய வைத்திருக்கொண்டிருந்த நிலையில், சென்னையில் பயிற்சியை முடித்த சிஎஸ்கே துபாய் சென்றது.
அங்கு 6 நாட்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு பின்னடைவாக இது அமைந்தது. சென்னையின் பயிற்சி தள்ளிப்போகலாம், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் கசிந்தன. அதற்கு அடுத்த இடியாக 2020 ஐபிஎல் தொடரிலிருந்து ரெய்னா விலகியதாக தகவல் வெளியானது.
சுரேஷ் ரெய்னாவிற்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு, தோனிக்கு கொடுத்தது போல பால்கனி அறை கொடுக்கப்படவில்லை, அணி நிர்வாகத்திடம் ரெய்னாவுக்கு சண்டை இப்படி பல காரணங்கள் சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தின. அதற்கு ஏற்றாற்போல சென்னை அணியின் நிர்வாகி சீனிவாசன், ரெய்னா மீது தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதனால் விவகாரம் பூதாகரமானது. இதற்கிடையே ரெய்னாவின் மாமா வீட்டில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலே அவர் ஊர் திரும்ப காரணம் எனப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் தனது மாமா உட்பட உறவினர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், சிலர் படுகாயமடைந்திருப்பதாகவும் ரெய்னா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே சென்னையில் அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 13 பேரும் குணமடைந்தனர் என்ற தகவல் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தரப்பிலிருந்து வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அது எப்படி 5 நாட்களில் அனைவருக்கும் நெகட்டிவ் என்ற சர்ச்சையும் கிளம்பியது. உடனே தனது அறிவிப்பை திருத்தம் செய்த விஸ்வநாதன், பாதிக்கப்பட்ட 13 பேரை தவிர மற்ற அனைவருக்கு நெகட்டிவ் என்று விளக்கமளித்தார். கொரோனா பதிப்பு இல்லாத சென்னை அணியினருக்கு நாளை (செப் 3) ஒரு பரிசோதனை செய்யப்படும், அதன்பின்னர் அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் எனவும், தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் நெகட்டிவ் உறுதியானால் பயிற்சியில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியேறியதற்கு சொந்த பிரச்னையே காரணம் என ரெய்னா விளக்கமளித்தார். தனக்கும் தோனிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையென கூறிய ரெய்னா, 12 கோடி வருமானத்தை எந்த ஒரு நபரும் காரணமின்றி இழக்கமாட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கும் சென்னை அணிக்கும் எந்த பிரச்னையும் இல்லை என உறுதிப்படுத்திய ரெய்னா, அடுத்த 4-5 வருடங்களுக்கு சென்னை அணியில் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இப்படியாக ரெய்னாவும், கொரோனாவும் சமூக வலைத்தளங்களை புரட்டி எடுக்க, ஐபிஎல் போட்டியின் ஹாட் டாபிக்காக சிஎஸ்கே மாறியுள்ளது.