சிஎஸ்கே கேப்டனான ரவீந்திர ஜடேஜா - ‘சின்ன தல’ ரெய்னா நெகிழ்ச்சிப் பதிவு

சிஎஸ்கே கேப்டனான ரவீந்திர ஜடேஜா - ‘சின்ன தல’ ரெய்னா நெகிழ்ச்சிப் பதிவு
சிஎஸ்கே கேப்டனான ரவீந்திர ஜடேஜா - ‘சின்ன தல’ ரெய்னா நெகிழ்ச்சிப் பதிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு, அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி வரும் சனிக்கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்க உள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கடந்தப் போட்டியில் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் முழுமையாக இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும், கூடுதலாக அகமதாபாத், லக்னோ ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், 10 அணிகள் தலா 14 சூப்பர் லீக் போட்டிகளில் ஆடவுள்ளது.

போட்டி துவங்க இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், யாரும் எதிர்பாராதவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, அந்த பொறுப்பிலிருந்து விலகி ரவீந்திர ஜடேஜாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சென்னை அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும், தோனிக்குப் பிறகு 2-வது முழுநேர கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சென்னை அணியின் துணைக் கேப்டனாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சுரேஷ் ரெய்னா, கடந்த 2010-ல் நடந்த ஐபிஎல் போட்டியின்போது, காயம் காரணமாக சில போட்டிகளில் தோனி விலக, தற்காலிக கேப்டனாக அவர் இருந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக ‘சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தான், சென்னை அணியின் அடுத்த கேப்டன் தான் என்று எதிர்பார்த்தநிலையில், கடந்த மாதம் நடந்த மெகா ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு, சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “என் சகோதரனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியது த்ரில்லாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வளர்ந்து வந்த ஒரு அணியின் தலைமையை ஏற்க, அவரை விட சிறப்பானவர் வேறு யாரும் இருப்பார்கள் என்று, நான் யாரையும் நினைக்கவில்லை.

ஜடேஜாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும், அன்பிற்கும் ஏற்ப நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com