“திறமை இருந்ததால் என்னை தோனி அணியில் சேர்த்தார்” - யுவராஜ் கருத்து ரெய்னா பதில்

“திறமை இருந்ததால் என்னை தோனி அணியில் சேர்த்தார்” - யுவராஜ் கருத்து ரெய்னா பதில்

“திறமை இருந்ததால் என்னை தோனி அணியில் சேர்த்தார்” - யுவராஜ் கருத்து ரெய்னா பதில்
Published on

ரெய்னாவுக்கு தோனி ஆதரவாக இருந்ததாக யுவராஜ் சிங் கூறிய கருத்துக்கு சுரேஷ் ரெய்னா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருப்பவர் யுவராஜ் சிங். தோனியைப் போன்று இவருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது அதிரடி பேட்டிங்கால் தான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யுவராஜ் சிங் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தினார். இந்த முறையும் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. தொடரின் நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கடந்த மாதம் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், 2011ஆம் ஆண்டு தான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது தொடர்பாக மனம்திறந்துள்ளார். அவர் கூறும்போது, “சுரேஷ் ரெய்னாவிற்கு பெரிய ஆதரவு இருந்தது. ஏனென்றால் அவரை அணிக்குள் கொண்டுவர தோனி விரும்பினார். அனைத்து கேப்டன்களுக்கும் தங்களுக்கு பிடித்தமான வீரரை அணிக்குள் கொண்டு வரவே விருப்பம் இருக்கும்.

அந்த வகையில் தான் தோனியும் ரெய்னாவை கொண்டுவர நினைத்தார். அந்த சமயத்தில் யூசுஃப் பதானும் நன்றாக விளையாடினார். மற்றொரு புறம் நான் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக பங்காற்றினேன். ஆனால் ரெய்னா சிறப்பாக விளையாடவில்லை. எனவே வேறுவழியின்றி என்னை அணிக்குள் சேர்த்தனர். அணிக்குள் அப்போது விக்கெட்டுகளை வீழ்த்தும் ஸ்பின்னரின் தேவை இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள சுரேஷ் ரெய்னா, “ஆமாம் தோனி எனக்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவித்தார். ஏனென்றால் என்னிடம் திறமை இருக்கிறது என அவர் அறிந்திருந்தார். அந்த நம்பிக்கையை நான் அவருக்காக நிறைவேற்றினேன். இந்திய அணியாக இருந்தாலும் சரி, சிஎஸ்கேவாக இருந்தாலும் சரி இதுதான் நிலை. தோனி எப்போதும் ஒருவருக்கு 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுப்பார். அவ்வாறு வாய்ப்பு கொடுக்கும்போதே, ‘சரியாக ஆடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது’ என்று கூறிவிடுவார், அந்த வகையில் தான் நானும் தோனியிடம் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கேட்டு என்னை நிரூபித்தேன்” என்று கூறியுள்ளார்.

அத்துடன், “உங்களுக்கு (யுவராஜ் சிங்) தெரியும் மிடில் ஆர்டரில் விளையாடுவது எளிதல்ல. களமிறங்கினால் 10-15 ஓவர்கள் ஆட வேண்டும். சில நேரங்களில் 30 ஓவர்கள் கூட ஆட நேரிடும். அத்துடன் 2 அல்லது 3 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். மேலும், 15-20 ரன்களையும் சேமித்துக்கொடுக்க வேண்டும். இதெல்லாம் கடினமான ஒன்று தான். ஆனால் சவாலான இந்தப் போட்டி எனக்கும் பிடிக்கும். அதை நான் நல்வாய்ப்பாகவே எடுத்துக்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com