கிரிக்கெட் வாழ்க்கையில் 17 ஆண்டுகள்.. ’சின்ன தல’ ரெய்னாவின் மறக்க முடியாத தருணங்கள்!

கிரிக்கெட் வாழ்க்கையில் 17 ஆண்டுகள்.. ’சின்ன தல’ ரெய்னாவின் மறக்க முடியாத தருணங்கள்!
கிரிக்கெட் வாழ்க்கையில்  17 ஆண்டுகள்.. ’சின்ன தல’ ரெய்னாவின் மறக்க முடியாத தருணங்கள்!

‘மிஸ்டர் ஐபிஎல்’, ‘சின்ன தல’ என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1986-ம் ஆண்டு பிறந்தவர் சுரேஷ் ரெய்னா. சிறு வயது முதல் கிரிக்கெட் மீது ஏற்பட்ட காதல் காரணமாக விடுதியில் தங்கி கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள துவங்கினார். கிரிக்கெட் அரங்கிற்கு வரும்போதே குழந்தை போல இருந்த ரெய்னா சிறிய வயதில் எப்படி இருந்து இருப்பார் என நினைத்து பாருங்கள். அவருடன் விளையாடிய சீனியர் வீரர்கள் பள்ளியில் அவரை ஒன்னும் சும்மா விடவில்லை. அவர் தூங்கும்போது குளிர்ந்த நீரை மேலே ஊத்துவது, குடிக்கும் பாலில் குப்பைகளை போடுவது என பல வித கொடுமைகளை சிறிய வயதில் கடந்துள்ளார் ரெய்னா. இதனால் எனக்கு தற்கொலை எண்ணங்கள் கூட வந்துள்ளது என தெரிவித்துள்ளார். என்னதான் கடுகு சிறுசு ஆனாலும் காரம் அதிகம் தானே, அப்படிதான் ரெய்னாவும். சிறிய வயது முதல் அதிரடிதான். அப்படி விளையாடிய ரெய்னாவிற்கு மும்பை ஏர் இந்தியாவின் ஸ்காலர்ஷிப் 1999 ஆம் ஆண்டு வீடு தேடி வந்தது.

அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி மும்பை சென்று 1999 ஆம் ஆண்டு பயிற்சியாளர் பிரவின் அம்ப்ரேவிடம் பயிற்சியை மேற்கொள்ள துவங்கினார். தனக்கு ஏர் இந்தியா வழங்கிய 10 ஆயிரம் ரூபாயில், 8 ஆயிரம் ரூபாயை வீட்டுக்கு அனுப்பி வைக்க துவங்கிய ரெய்னா தன்னுடைய அதிரடி பாணியை துவங்கினார். தன்னுடைய 16 வயதில் 2004 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ரன்களை குவிக்க ஆஸ்திரேலியாவின் பார்டர்- காவஸ்கர் கோப்பை ஸ்காலர்ஷிப் மூலம் ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொண்டார்.

பின்னர் இந்தியா திரும்பிய ரெய்னா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தன்னுடைய முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார் ரெய்னா. 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தடுமாறி வந்த வேளையில் 19 வயது சிறிய இளம் வீரர் ஆண்டர்சன், பிளின்டாப்ன்னு யாரையும் விட்டு வைக்காம 81 ரன்கள் அடிச்சு அணிக்கு வெற்றி பெற்று தந்து உலக ரசிகர்களின் பார்வையை இழுத்த ரெய்னா, 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் 6 போட்டிகளில் 372 ரன்கள் குவித்து இந்திய அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்தார்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட துவங்கிய சுரேஷ் ரெய்னா தொடர்ச்சியாக ரன்களை குவிக்க துவங்கியது மட்டும் இல்லாமல் ‘சின்ன தல’, ‘மிஸ்டர் ஐபிஎல்’ என்ற பட்டங்களையும் ரசிகர்களிடம் பெற்றார். இந்தியாவிற்காக 226 ஒருநாள் போட்டிகள், 18 டெஸ்ட் போட்டிகள், 78 டி20 போட்டிகள் என 322 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 8,000 ரன்களை குவித்துள்ளார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 5528 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் இந்திய அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் ரெய்னாதான் படைத்தார். இந்திய அணிக்காக 322 போட்டிகளில் ரெய்னா விளையாடி இருந்தாலும், 15 போட்டிகளுக்கு மேல் ஒரு இடத்தில் விளையாடியது இல்லை. கேப்டன் எந்த இடத்தில் களமிறங்க சொன்னாலும் களமிறங்கி விளையாடிய ரெய்னா, அணிக்காக பேட்டிங் பவுலிங், பீல்டிங் என மூன்று விதத்திலும் சிறந்து விளங்கினார்.

ரெய்னா என்றவுடன் ரசிகர்கள் அனைவருக்கும் பஞ்சாப் அணிக்கு எதிராக 27 பந்துகளில் அடித்த 85 ரன்கள் தான் நினைவிற்கு வரும். ஆனால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை அரை இறுதி போட்டியில் ரெய்னா குவித்த 36 ரன்கள் தான் உண்மையில் அவரின் சிறந்த இன்னிங்ஸ் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் சொல்லிக்கொண்டு தான் உள்ளனர். சிறுபிள்ளை தனம் மாறாத அந்த சிரிப்பு, விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் முதுகின் மேல் சவாரி, பாய்ந்து பாய்ந்து பந்துகளை பிடிப்பது, டைவ் அடித்து ரன்கள் சேர்ப்பது, வியர்வை சொட்ட சொட்ட ஸ்லீவைத் தூக்கிவிட்டு ரெய்னா அடித்த இன்சைட் அவுட் ஷாட்களும், மிட் விக்கெட்டில் பறக்கவிட்ட சிக்சர்களை மீண்டும் பார்த்து விடுவோம் என ரசிகர்கள் நினைத்த வேளையில், இன்று அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் ரெய்னா.

ரெய்னா ஓய்வு பெற்றாலும் சென்னை அணிக்காக அவர் 4 கோப்பையை வென்று தந்ததையும், இந்திய அணியில் அவரின் சாதனையும் யாராலும் மறைக்க முடியாது.

- சந்தான குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com