தவற விட்ட கோலி - 5000 ரன்களை முதல் வீரராக எட்டிய ரெய்னா
ஐபிஎல் போட்டிகளில் முதல் வீரராக சுரேஷ் ரெய்னா 5000 ரன்கள் எட்டி சாதனை படைத்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ்வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இந்தப் போட்டியில் முதல் வீரராக ஐபிஎல்-ல் 5000 ரன்களை எட்டப் போவது விராட் கோலியா? ரெய்னாவா? என்ற கேள்வி இருந்தது. ஏனெனில் ரெய்னா 4985 எடுத்திருந்ததால் அவருக்கும் இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. விராட் கோலி 4948 ரன்கள் எடுத்திருந்ததால் அவருக்கு 52 ரன்கள் தேவையாக இருந்தது. அதனால், யாருக்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் முதலில் 5000 ரன்கள் எட்டுவார்கள் என்று கணிக்கப்பட்டது.
அதன்படி, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தொடக்க வீரராக களமிறங்கிய அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். பெங்களூரு அணியும் 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை அணியில் ரெய்னா பொறுமையாக விளையாடி 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 15 ரன்கள் எடுத்த போது, ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள் அடித்த முதல் வீரர்கள் என்ற பெருமையை தட்டிச் சென்றார். 177 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா 35 அரை சதங்களை அடித்துள்ளார். 11 ஐபிஎல் தொடரில் 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரரும் ரெய்னாதான்.