’யோ யோ’ வால் வாய்ப்பிழந்த சுரேஷ் ரெய்னா, வாஷிங்டன் சுந்தர்!
’யோ யோ’ டெஸ்டில் தேர்வாகாததால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை, சுரேஷ் ரெய்னா மீண்டும் இழந்தார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இந்த டெஸ்டில் தேர்வு பெறாததால் அணியில் இடம்பெறவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். இலங்கையில் நடந்த தொடரில் அவர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது நடந்த ’யோ யோ’ டெஸ்டில் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் தேர்வாகாததால் அணியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணிகளுக்கான உடல் தகுதி தேர்வு நடந்துள்ளது. இதில் சுரேஷ் ரெய்னா, சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, ஐபிஎல் போட்டியில் கலக்கிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் மூன்று பேருமே ’யோ யோ’ என்ற உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.