ஏமாற்றிய பிரித்வி, ரிஷப் - ஹைதராபாத் அணிக்கு 130 ரன் இலக்கு
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 130 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் பிரித்வி ஷா முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், 11 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தவான் 12, ரிஷப் பண்ட் 5 ரன்களில் மீண்டும் ஏமாற்றினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக விளையாடினார். திவாதியா, இங்கிராம் தலா 5 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினர். அதனால், டெல்லி அணிக்கு மிடில் ஆர்டரும் கை கொடுக்கவில்லை. நன்றாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் 43(41) ரன்னில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
மோரிஸ் 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் அக்ஸர் படேல் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அக்ஸர் 13 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது நபி, கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். இதில் ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.