ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற 23வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்தப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்த தவான் இந்தப்போட்டியில் களமிறங்கினார். ஆனால் ஹைதராபாத்துக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக மெக்லெஹான் பந்துவீச்சில் ஐதராபாத் வீரர்கள் தடுமாறினர். மெக்லெஹான் வீசிய பந்து, தவானின் பேட்டில் பட்டு அவரது முடியை பதம் பார்த்தது. தவான் வலியால் துடித்தார். அடுத்த பந்திலே மிடில் ஸ்டெம்பை பறிகொடுத்து, விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சஹா ரன் எதுவும் இல்லாமல் அதே ஓவரிலே வெளியேறினார். மனிஷ் பாண்டே-கேப்டன் வில்லியம்சன் ஆகியோரின் ஆட்டம், சற்று அணியை தேத்துவது போல் இருந்தது. இவர்கள் இவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற அந்த அணி 100 ரன்களை கடப்பதே கடினமாக இருந்தது.
மும்பை பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை திறம்பட செய்தனர். ஐதராபாத் அணியை மீளவிடாமல் தாக்குதலை தொடுத்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் யூசுப் பதான் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். யூசுப் பதான் 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரது நிதானமான ஆட்டத்தால் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சொந்த மண்ணில் இவ்வளவு எளிய இலக்கை அடைவது, மும்பை அணிக்கு பெரிய விஷயமாக இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். கடந்த ஆட்டத்தின் போது சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதல் 10 ஒவர்களில் பந்துவீச்சாளர்களை திறம்பட கையாண்ட ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன், மும்பைக்கு எதிராகவும் நேற்று சிறப்பாக செயல்பட்டார். ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் மும்பை அணி வீரர்களை தொடர்ந்து எழுச்சி பெற விடாமல் தடுத்தனர். மும்பைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்டனர். தொடக்க ஆட்டக்காரடர் லீவிஸ் (5), கேப்டன் ரோகித் 2 ரன்கள் என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
மும்பை அணியில், சூர்யகுமார் 34 ரன்களும், க்ருனல் பாண்டியா 24 ரன்களும் சேர்த்தனர். எஞ்சிய 8 பேரில் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 6 பேர் ஒற்றை இலக்கத்திலும் 2 பேர் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிய 18.5 ஓவரில் 87 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணி ஆல்அவுட் ஆனது. ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், ரஷீத்கான் மற்றும் பசில் தம்பி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் ஐதராபாத் அணி 3-வது இடத்தில் உள்ளது.

