குஜராத்திற்கு எதிராக சன் ரைசர்ஸ் அபார ஆட்டம்! 195 ரன்கள் குவித்து அசத்தல்!

குஜராத்திற்கு எதிராக சன் ரைசர்ஸ் அபார ஆட்டம்! 195 ரன்கள் குவித்து அசத்தல்!
குஜராத்திற்கு எதிராக சன் ரைசர்ஸ் அபார ஆட்டம்! 195 ரன்கள் குவித்து அசத்தல்!

அபிஷேக் ஷர்மா, ஐடம் மார்க்ரம், ஷஷாங்க் சிங் பொறுப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக 195 ரன்களைக் குவித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

இன்றைய ஐபிஎல் போட்டியில் அசுர பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஐபிஎல் 2022 சீசனில் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க போராடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

சன் ரைசர்ஸ் அணியின் ஓப்பனர்களாக அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியன்சன் களமிறங்கினர். முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் “வைடு” பால்களாக வீசி 10 ரன்களை தாரை வார்த்தார். அடுத்து யாஷ் தயாள் வீசிய ஓவரில் இருவரும் விரட்டி ஆட ஸ்கோர் உயரத் துவங்கியது. ஆனால் ஷமி வீசிய ஓவரில் க்ளீன் போல்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார் வில்லியம்சன். அடுத்து வந்த ராகுல் திரிபாதி கொடுத்த அருமையான கேட்சை ரஷீத் கான் தவற விட்டார்.

அடுத்து அவர் பவுண்டரி , சிக்ஸர்களாக விளாசத் துவங்கியபோது, ஷமி பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். 5 ஓவர்களில் 44 ரன்களை சேர்த்த போதும், டாப் ஆர்டரில் முக்கிய வீரர்களை இழந்ததால் கொஞ்சம் தடுமாறியது சன் ரைசர்ஸ். அடுத்து வந்த ஐடம் மார்க்ரம், அபிஷேக் ஷர்மாவுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்ட, ஸ்கோர் நிலையாக உயரத் துவங்கியது.

பொறுப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 33 பந்துகளில், சிக்ஸர் விளாசியபடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிக்ஸர், பவுண்ட்ரிகளை பறக்கவிட்ட அபிஷேக், அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு அபிஷேக்-மார்க்ரம் ஜோடி 96 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான், ஷமியின் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஐடன் மார்க்ரம் 35 பந்துகளில் அபிஷேக்கைப் போல சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார். ஆனால் அவரும் யாஷ் தயாள் பந்துவீச்சில் அவுட்டாக, மிக முக்கிய டெத் ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி தள்ளாடத் துவங்கியது. 19வது ஓவரில் 8 ரன்களை மட்டுமே சேர்த்த அந்த அணி 20வது ஓவரில் 25 ரன்களை குவித்தது. ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன் காட்டிய அதிரடியால் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது சன் ரைசர்ஸ். 196 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாட உள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com