தற்போது இருப்பதுதான் மிகச்சிறந்த இந்திய அணி: கோலியை புகழும் கவாஸ்கர்
விரோட் கோலி தலைமையில் தற்போது விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிதான் ‘மிகச்சிறந்த அணி’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, கடந்த 24ஆம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 3-0 பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதன்மூலம் 120 புள்ளிகளுடன் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அத்துடன் கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியக் கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியை பாராட்டி பேசியுள்ள சுனில் கவாஸ்கர், தற்போது கோலி தலைமையில் உள்ள இந்திய அணி ஒரு மிகச்சிறந்த அணி என்றும், இதுவரை இருந்த அணிகளிலேயே இதுதான் சிறந்த அணி என்றும் கூறியுள்ளார். தற்போது உள்ள ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 8 விக்கெட்டுகள் வரை நன்றாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளதாகவும், பந்துவீச்சாளர்கள் திறமையாக விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த அணிக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் தலைமை ஏற்றுள்ளதாகவும், கோலியை குறிப்பிட்டு அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.