நான் ஏன் பயிற்சியாளராகவில்லை? - மனம் திறந்த சுனில் கவாஸ்கர்
தான் ஏன் இந்திய கிரி்க்கெட் அணியின் பயிற்சியாளராகவில்லை என்பது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
'The Analyst' என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கவாஸ்கர் "நான் மிகத் தீவிரமாக கிரிக்கெட் பார்க்கக் கூடிய நபர். நான் விளையாடிய காலக்கட்டத்தில் கூட, அவுட்டானவுடன் உடனடியாக பெவிலியன் சென்று கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்ப்பேன். பின்பு உடையை மாற்றிவிட்டு, சில கடிதங்களை படித்துவிட்டு மீண்டு கிரிக்கெட்டை பார்க்க அமர்ந்துவிடுவேன். அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொண்டே போட்டியை ரசிப்பேனே தவிர, ஒரே இடத்தில் அமர்ந்து ஒவ்வொரு பந்தையும் பார்க்கமாட்டேன். அப்படி ஒவ்வொரு பந்தையும் பார்க்க கூடியவர் ஜிஆர் விஸ்வநாத்" என்றார்.
மேலும் பேசிய அவர் "இந்திய அணியின் பயிற்சியாளராகவோ தேர்வாளராகவோ வேண்டுமென்றால் போட்டியின் ஒவ்வொரு பந்தையும் பார்க்க வேண்டும். அதனால்தான் ஒருபோதும் பயிற்சியாளராகவே வேண்டும் என நினைக்கவில்லை, அதற்கு விண்ணப்பிக்கவும் இல்லை. ஆனால் என்னிடம் நிறைய வீரர்கள் வந்து ஆலோசனை கேட்பார்கள். இப்போது இருக்கும் வீரர்கள் இல்லை. என்னிடம் சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக் மற்றும் லக்ஷமன் ஆகியோர் கேட்பார்கள். நானும் மகிழ்ச்சியுடன் என் சிந்தனையை அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன். ஆனால் முழு நேர பயிற்சியாளர் வேலையை என்னால் செய்ய முடியாது" என்றார் சுனில் கவாஸ்கர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சுனில் கவாஸ்கர்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக 10 ஆயிரம் ரன்களை சேர்த்தவர். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 1987 இல் ஓய்வுப்பெற்ற கவாஸ்கர், தொலைக்காட்சியில் வர்ணனையாளராக தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.