‘எங்க வைரத்தை எப்போ தருவீங்க?’ - கவாஸ்கரின் கேள்வியால் ஷாக் ஆன இங்கிலாந்து வர்ணனையாளர்!

‘எங்க வைரத்தை எப்போ தருவீங்க?’ - கவாஸ்கரின் கேள்வியால் ஷாக் ஆன இங்கிலாந்து வர்ணனையாளர்!
‘எங்க வைரத்தை எப்போ தருவீங்க?’ - கவாஸ்கரின் கேள்வியால் ஷாக் ஆன இங்கிலாந்து வர்ணனையாளர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ அணிகள் ஆட்டத்தின்போது, முன்னாள் இந்திய அணி வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கோஹினூர் வைரத்தை திருப்பித் தருமாறு கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 20 லீக் போட்டிகள் நிறைவடந்துள்ளது. இன்று நடைபெறும் 21-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், நேற்று நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ அணிகள் பரபரப்பாக ஆட்டத்தை வெல்லும் முனைப்பில் ஈடுபட்டிருந்தன. அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராக பணிபுரிந்து வரும் சுனில் கவாஸ்கர் நகைச்சுவையாக பேசிய சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது வர்ணனையாளராக சுனில் கவாஸ்கர் பேசும் விஷயங்கள் சில சமயம் எதிர்ப்பை கிளப்பினாலும், சில சயமங்களில் நகைச்சுவையுடன் அமைந்துவிடும். அந்த வகையில், நேற்று நடந்த போட்டியின்போது, முன்னாள் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆலன் வில்கின்ஸிடம், “இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்ற அந்த கோஹினூர் வைரத்திற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஆலன் வில்கின்ஸ் பின்னர் பயங்கரமாக சிரித்துவிட்டு “அது எப்போது திரும்பி வரும் என்று நானும் ஆச்சரியத்துடன் உள்ளேன்” என தெரிவித்தார். இதையடுத்து சுனில் கவாஸ்கர், ஏதேனும் செல்வாக்கு இருந்தால், அதனை பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் மகாராணியிடம் கேட்டு, அந்த விலைமதிப்பற்ற கோஹினூர் வைரத்தை பெற்றுதருமாறு, ஆலன் வில்கின்ஸிடம், அவர் நகைச்சுவையாக கேட்டார்.

இந்த இருவரின் கலகலப்பான இந்தப் பேச்சு, போட்டி நடக்கும்போது , கிரிக்கெட் ரசிர்களுக்கும் கேட்டதால் அவர்களும் சிரித்தனர். அவரால் மட்டும்தான் இந்த மாதிரி தைரியமாக கேள்வி கேட்க முடியும் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நகைச்சுவை பேச்சு தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்களில் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com