‘வாய் சொல் வீரனல்ல’ என நிரூபித்த சுனில் சேத்ரி: ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா?
“ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து தொடர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதை பார்க்கிறேன். நாங்கள், அவர்கள் அளவுக்கு இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கு அருகில் கூட இல்லை.” -இது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் உருக்கமான வீடியோ. வெளிநாட்டில் நடைபெறும் கால்பந்து தொடர்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்திய ரசிகர்கள், தங்களின் தேசிய அணிக்கு போதிய ஆதரவு அளிப்பத்தில்லை என்ற வருத்தத்தில் இந்த வீடியோவை சுனில் சேத்ரி ட்விட்டரில் பதிவிட்டார். அவரது இந்த பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்தியாவில் தற்போது இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற இந்தியா - தபே அணிகளுக்கான போட்டியை 2000க்கும் குறைவான பார்வையாளர்களே கண்டுகளித்தனர். வெறிச்சோடி காணப்பட்ட மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து சுனில் சேத்ரி தனது வருத்தத்தை வீடியோ மூலமாக ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் இந்தியா - கென்யா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
மும்பையில் நடைபெற்ற கென்ய அணியுடனான போட்டி, சுனில் சேத்ரியின் 100 ஆவது போட்டி. நேற்று நடைப்பெற்ற போட்டியை பாலிவுட் பிரபலம் அபிஷேக் பச்சன், சுனில் சேத்ரியின் மனைவி சோனம் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு களித்தனர். ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து 71 ஆவது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் ஜேஜே இந்திய அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.
போட்டியின் கூடுதல் நேரத்தில் சுனில் சேத்ரி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார். மழைக்கு இடையே நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்திய அணி தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கியதால் கென்ய அணியின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.இந்தப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. போட்டிக்கு பின்னர் சுனில் சேத்ரிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.