10 நாட்களில் 3 சதம் அடித்தும் 1 ரன்னில் சாதனையை தவறவிட்ட சுப்மன் கில்!

10 நாட்களில் 3 சதம் அடித்தும் 1 ரன்னில் சாதனையை தவறவிட்ட சுப்மன் கில்!
10 நாட்களில் 3 சதம் அடித்தும் 1 ரன்னில் சாதனையை தவறவிட்ட சுப்மன் கில்!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் சுப்மன் கில் சதம் அடித்ததால், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார், தொடக்க பேட்டரான சுப்மன் கில். நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டைச் சதம் கண்டு, சாதனைப் பட்டியலில் இணைந்த கில், இன்றைய போட்டியிலும் சதம் அடித்து மீண்டும் சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில், தொடக்க பேட்டர்கள் பார்டனர்ஷிப்பில் கேப்டன் ரோகித் சர்மாவோடு இணைந்து புதிய சாதனை படைத்தார்.

அந்த இணை, 204 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி, கில் இன்று தன்னுடைய 4வது சதத்தையும் பதிவு செய்தார். நியூசிலாந்துக்கு எதிராக அவர் அடித்த இரண்டாவது சதம் இது. கில், 78 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து டிக்னர் பந்துவீச்சில் வீழ்ந்தார். இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்ததன் மூலம், குறைந்த இன்னிங்ஸ்களில் 4 சதம் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இணைந்தார் கில்.

இந்தச் சாதனையை மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 24 இன்னிங்ஸ்களிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் 22 இன்னிங்ஸ்களிலும் செய்திருந்தனர். இதை சுப்மன் கில், இன்று 21 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் அல் ஹுக் 9 இன்னிங்ஸ்களில் முதலிடத்தில் உள்ளார். இரு நாடுகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சுப்மன் கில் இடம்பிடித்தார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாமோடு முதலிடத்தில் இணைந்துள்ளார். இன்றைய போட்டியில் இன்னும் ஒரெயொரு ரன்னை கில் எடுத்திருந்தால், பாபர் அசாம் சாதனையை முறியடித்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருவரும் 360 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளனர். அசாம், 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு அணிக்கு எதிராக இந்தச் சாதனையை செய்துள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டு பிறந்து 24 நாட்களுக்குள் 3 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஜனவரி 15ஆம் தேதி இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 97 பந்துகளில் 116 ரன்களையும், ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 149 பந்துகளில் 208 ரன்களையும், அதே நியூசிலாந்துக்கு எதிராக இன்றைய போட்டியில் 78 பந்துகளில் 112 ரன்களையும் எடுத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் 10 நாட்களுக்குள் 3 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் கடந்த போட்டியிலும் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com