கோட்டைவிட்ட நியூசிலாந்து.. வெளுத்து வாங்கி சதம் விளாசிய கில் - இந்தியா 234 ரன் குவிப்பு

கோட்டைவிட்ட நியூசிலாந்து.. வெளுத்து வாங்கி சதம் விளாசிய கில் - இந்தியா 234 ரன் குவிப்பு
கோட்டைவிட்ட நியூசிலாந்து.. வெளுத்து வாங்கி சதம் விளாசிய கில் - இந்தியா 234 ரன் குவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 234 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்றிருந்த நிலையில், தற்போது இவ்விரு அணிகளுக்கான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, இரு அணிகளும் சமநிலை வகித்தன. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியே, தொடரைக் கைப்பற்றும் என்பதால், இவ்விரு அணிகளும் பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்கின.

மீண்டும் இஷான் சொதப்பல்.. 

இதையடுத்து இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதற்கு முன் இந்திய அணியில் ஒரெயொரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹலுக்கு ஓய்வளிக்கப்பட்டு, உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக வழக்கம்போல் இஷான் கிஷனும், சுபமன் கில்லும் களமிறங்கினர். இந்த தொடரில் அவர்கள் இருவரும் சொதப்பி வரும் நிலையில், இன்றைய போட்டியில் அவர்கள் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். ஆனால், இஷான் கிஷன் 1 ரன் எடுத்திருந்தபோது பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி, வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.

நல்ல தொடக்கம் தந்த திரிபாதி - சுப்மன் கில்

அதேநேரத்தில், விமர்சனத்துக்குள்ளான மற்றொரு வீரரான சுப்மன் கில் பொறுப்புணர்ந்து ஆடினார். அவருக்கு இணையாக ராகுல் திரிபாதியும் கைகோர்த்தார். இருவரும் பொறுமையாக விளையாடியதுடன் ஏதுவான பந்துகளையும் பவுண்டரி எல்லைக்கு அனுப்பினர். அதிரடியாய் விளையாடிய ராகுல் திரிபாதி, 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து சோதி பந்தில் ஃபெர்குஷனிடம் வீழ்ந்தார். அப்போது அணி, 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு களமிறங்கிய துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில்லுடன் இணைந்தார்.

சதம் விளாசிய சுப்மன் கில்

மறுபுறம் பொறுமையாக விளையாடி சுப்மன் கில் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருடன் மறுபுறம் இணைந்து விளையாடி சூர்யகுமார் அதிரடியாய் விளையாடி 13 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவருக்கு அடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அதேவேளையில், ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய சுப்மன் கில், ஆட்டத்தின் பிற்பகுதியில் அதிரடியாக ஆடி 54 பந்துகளில் சதம் அடித்தார். அவருக்கு டி20யில் இது, முதல் சதம். 35 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் அடுத்த 19 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.  அத்துடன் இந்திய அணி 200 ரன்களைக் கடக்கவும் உதவி செய்தார்.

இந்திய அணி 234 ரன் குவிப்பு

இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடக்கம். மறுபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக ஆடி, 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில், பிரேஸ்வெல், மிட்செல், சோதி, டிக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com