குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மதுரை மாணவி! வறுமையில் பீட்சா கடையில் வேலைசெய்யும் அவலநிலை!

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மதுரை மாணவி! வறுமையில் பீட்சா கடையில் வேலைசெய்யும் அவலநிலை!
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மதுரை மாணவி! வறுமையில் பீட்சா கடையில் வேலைசெய்யும் அவலநிலை!

குத்துச்சண்டை போட்டியில் சர்வதேச அளவில் தங்கம் வென்ற கல்லூரி மாணவி, வறுமையின் காரணமாக பீட்சா கடையில் சர்வராக பணிபுரியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வெள்ளரிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ராஜபாண்டி - கவிதா தம்பதியர். இவர்களது மகள் வர்ஷினி மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வர்ஷினியின் தந்தையும் தாயும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதம் டெல்லியில் நடந்த சர்வதேச கால் குத்துச்சண்டை (கிக் பாக்சிங்) போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற வர்ஷினி, தான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். ஓட்டல் தொழிலாளியின் மகள் சர்வதேச போட்டில் தங்கம் வென்ற செய்தியை அறிந்த வெள்ளரிப்பட்டி கிராம மக்கள் அந்த மாணவிக்கு பாராட்டுகளை நேரில் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தன்னை மேலும் வளர்த்துக் கொண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நம்பிக்கையுடன், நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும், கூலித் தொழிலாளியான தன் தாய் தந்தையரின் கஷ்டம் உணர்ந்து மதுரை கேகே நகரில் உள்ள பீட்சா கடையில் பகுதி நேர பணியில் சேர்ந்து, அவரது படிப்பு மற்றும் விளையாட்டுக்கான செலவினங்களை சரி கட்டி வருகிறார் வீராங்கனை வர்ஷினி.

சர்வதேச போட்டியில் பங்கேற்க பணமில்லாத நேரத்தில் தன் தாய் பணி புரியும் நிறுவனத்தின் மூலமாகவும் மற்றும் கல்லூரி நிர்வாகமே வர்ஷினிக்கு உதவுகிறது. ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தாய் நாட்டிற்கு நிச்சயம் தங்கம் பெற்று தர வேண்டும் என்கின்ற இவரது நம்பிக்கையை புரிந்து வர்ஷினி மென்மேலும் சாதிக்க வேண்டும் என பெற்றோரும் முடிந்த உதவியை செய்து உற்சாகமளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் தங்கம் வென்ற வீராங்கனை வர்ஷினி பேசுகையில், "எனது ஆறு வயதில் இருந்தே குத்துச்சண்டை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு அதற்காக பயிற்சி எடுத்து வந்தேன். ஆரம்பத்தில் போட்டியில் கலந்து கொண்டு தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்து குத்துச்சண்டை நுணுக்கங்களை அறிந்து கொண்டு மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றேன்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு கால் குத்து சண்டை போட்டி குறித்து அறிந்து கொண்டு அதில் பங்கேற்றேன். ஏற்கனவே குத்துச்சண்டை நுணுக்கங்கள் நன்கு அறிந்திருந்ததனால், கால் குத்துச்சண்டை மிகவும் எளிமையாக இருந்தது. இதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தாய் நாட்டிற்காக தங்க பதக்கத்தை வென்றெடுத்தேன்” என்று கூறினார்.

குடும்ப சூழல் காரணமாக எனது பயிற்சிக்கும், எனது கல்லூரி படிப்புக்கும் தேவையான பணத்தை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். காலையில் பயிற்சி முடித்துவிட்டு, அதன் பிறகு படிப்பு மாலையில் பகுதி நேர வேலை என சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறது.

மேலும் வருகின்ற 2028 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில், கால் குத்துச்சண்டை போட்டியும் புதிதாக இணைய உள்ளது. இதனிடையே கால் குத்துச்சண்டை போட்டியில் நான் பயிற்சி பெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி அளித்து எனக்கு ஊக்குவித்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் நாட்டிற்காக பங்கேற்று பதக்கங்களை வெல்வேன் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

-குணா & பிரசன்ன வெங்கடேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com