“இந்த உலகக் கோப்பை எங்களுடையது” - ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்
நடப்பு உலகக் கோப்பை தொடரை நாங்களே வெல்வோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பெறும் மூன்றாவது தோல்வி இதுவாகும். ஏற்கெனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. எனவே இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், “இந்த உலகக் கோப்பை தொடர் எங்களுடையது. கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் அணிக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. உலகக் கோப்பை தொடர் என்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பது எங்களுக்கு தெரியும். அதேபோல ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டிற்கு உலகக் கோப்பையில் விளையாடுவது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது.
ஒரு சில போட்டிகளில் தோற்றது கஷ்டமாகதான் இருக்கிறது. எல்லோரும் தங்கள் அணியை வெற்றிக்கு எடுத்து செல்ல போராடுவார்கள் அந்தவகையில்தான் நானும் கடந்த இரு போட்டிகளிலும் விளையாடினேன். எனினும் அணி வெற்றிப்பெறாத போது இந்த ரன்கள் எடுத்தும் எந்தவித பயனுமில்லை.
எங்களுக்கு கடைசியாக இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. இந்தப் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். இந்த இரண்டு போட்டிகளுமே வித்தியாசமான சூழலில் விளையாட போகிறோம். எனவே இந்தப் போட்டிகளுக்கு செல்லும் முன்பே இதற்கான திட்டத்தை வகுக்க இருக்கிறோம்.
பின்னர் போட்டியின் தன்மைக்கு ஏற்ப திட்டத்தில் சிறிய மாற்றம் செய்வோம். இங்கிலாந்து நாட்டில் இந்தியாவிற்கு எதிராக நாங்கள் நல்ல ரெகார்டு வைத்துள்ளோம். எனினும் இந்திய அணி தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளது. ஆகவே இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
இங்காலந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தோற்றப் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.